கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து நிகழ்வில் மொராக்கோ-போர்ச்சுகல் இடையேயான காலிறுதிப் போட்டி நேற்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் உலக புகழ்பெற்ற போர்ச்சுகல் அணியுடன் மொராக்கோ மோதியதால் கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவருமே இதனை ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.
இந்த போட்டியில் பலர் எதிர்பாராத வண்ணம் மொராக்கோ அணியானது 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்தது. இதன் மூலம் கால்பந்து உலகக்கோப்பையின் அரையிறுதியில் நுழைந்த முதலாவது ஆப்பிரிக்க நாடு மற்றும் முதலாவது அரபு நாடு என்ற சாதனையை மொராக்கோ நிகழ்த்தியுள்ளது. இதனை அரபு நாட்டு ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அரபு நாட்டை சார்ந்த தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் போட்டி முடிவடைந்த சில நிமிடங்களிலேயே, துபாய் ஆட்சியாளரும், துபாயின் பட்டத்து இளவரசரும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், “உலகக் கோப்பையில் மற்ற அனைத்து அணியின் குரலை விட மொராக்கோவின் குரல் பலமாக ஒலித்துள்ளது. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். அரேபியர்களின் உலகக்கோப்பை கனவு தற்பொழுது மொராக்கோவின் சிங்கங்களின் கைகளில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “மொராக்கோ அணியின் இந்த வெற்றி ஒவ்வொரு அரபு வீடுகளிலும், உலகம் முழுவதும் உள்ள உங்கள் ரசிகர்களையும் மகிழ்வித்தது. சகோதர நாடான கத்தார் நிலத்தில் உலகக்கோப்பையில் ஒரு அரபு நாடு வரலாற்று சாதனையை பதிவு செய்யும் கனவு வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.