இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய உறவை சொல்லி நாம் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் இருந்து வந்து அமீரகத்தில் தொழில் செய்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தோடு இங்கே வசிப்பவர்கள் என்று இல்லாமல், வேலை தேடி வருபவர்கள், அமீரகத்தை சுற்றி பார்க்க வருபவர்கள் என ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான நபர்கள் அமீரகத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனை மெய்ப்பிக்கின்ற விதமாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு டிராவல் சர்வீஸ் கம்பெனி நடத்திய ஆய்வோட முடிவும் அதனை உறுதி செய்துள்ளது.
வட அமெரிக்காவில் ஏர் டிக்கெட் புக்கிங் சர்வீஸ் செய்து வரும் ஒரு பெரிய நிறுவனம்தான் SABRE கார்பரேஷன். இந்நிறுவனமானது உலகளவில் அதிகமான பயணிகள் பயணம் செய்யக்கூடிய நாடுகள் எது என தெரிந்து கொள்ள மேற்கொண்ட ஆய்வில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகம் முதன்மையான இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாக அமீரகம் மாறியுள்ளதாவும் அந்த ஆய்வின் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல், பண்டிகை காலத்தில் குடும்பங்கள் அதிகமாக பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா அமீரகம் இடையிலான பயணிகள் சேவை உலகளவில் 10 வது இடத்தை பிடித்துள்ளதாகவும் நிறுவனத்தின ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 6.8 மில்லியன் பயணிகளை கையாண்டதன் மூலமாக, துபாய் விமான நிலையத்தின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 1.24 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருகை தந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமீரகத்திற்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, அமீரகத்தில் தங்குவதற்கு ஆக கூடிய செலவு குறைவாக இருப்பது, இரண்டு நாட்டுக்கும் இடையில் பயண நேரம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால், இந்தியப் பயணிகள் தங்களின் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட விரும்பும் ஒரு பிரபலமான இடமாக அமீரகம் இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் அதிகளவிலான பயணிகள் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் பிடித்துள்ளதாகவும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில்தான் உலகிலேயே அதிகளவிலான பயணிகள், விமான பயண போக்குவரத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.