ஷார்ஜாவில் வருடந்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு ஷாப்பிங் அனுபவங்களைத் தரும் ஷார்ஜா ஷாப்பிங் ப்ரொமோஷனின் இந்த வருட சீசனானது இன்று (டிசம்பர் 15, 2022) தொடங்குகிறது. இந்த ஷாப்பிங் ப்ரமோஷனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஷாப்பிங் ப்ரொமோஷன் இன்று தொடங்கி வரும் ஜனவரி 29, 2023 வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் பல்வேறு தயாரிப்புகளில் இந்த தள்ளுபடியை பொதுமக்கள் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது நூற்றுக்கணக்கான பரிசுகளுடன், தனித்துவமான ப்ரொமோஷன் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் அமைப்பாளரான ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (SCCI) தெரிவித்துள்ளது.
ஷார்ஜாவின் ஷாப்பிங் சென்டர்களில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் ஷார்ஜா ஷாப்பிங் ப்ரொமோஷன் 2022 இல் பங்கேற்கின்றன என்றும், மேலும் அவை சர்வதேச பிராண்டுகள் மற்றும் எண்ணற்ற நுகர்வோர் பொருட்களில் தங்கள் ப்ரொமோஷன்களை தொடங்க தயாராக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா ஷாப்பிங் ப்ரொமோஷன்கள், பங்குபெறும் ஷாப்பிங் மையங்களிலிருந்து ஆடைகள், வாசனை திரவியங்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், பயணச் சாதனங்கள் மற்றும் பலவற்றில் பெரியளவிலான தள்ளுபடிகளை பெறுவதோடு பரிசுப் பொருட்கள், ஷாப்பிங் வவுச்சர்கள், பரிசுக் கூப்பன்கள் போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) நிகழ்வும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.