ஒவ்வொரு வருடமும் துபாயில் வெகு விமரிசையாக நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (Dubai Shopping Festival) 28-வது பதிப்பு டிசம்பர் 15 முதல் கோலாகலமாக துவங்கியுள்ளது. துபாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த DSF அடுத்த வருடம் ஜனவரி 29 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த DSF நடைபெறும் 46 நாட்களும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஷாப்பிங் செய்வதில் பல புதுமையான அனுபவங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் பெரிதளவில் நீக்கப்பட்ட பின்னர் நடத்தப்படவிருக்கும் முதல் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் இதுவே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சுமார் 3,500 அவுட்லெட்டுகளில் 800-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உலகின் சிறந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள், தனித்துவமான உணவு அனுபவங்கள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச இசையின் நேரடி கச்சேரிகள் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் அனைத்து விதமான பொருட்களை சலுகைகளுடன் பெறுவதோடு 1 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு, ஒரு புதிய நிசான் பேட்ரோல் மற்றும் டவுன்டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வுகளில் உலகப் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் நிகழ்ச்சி, மால்களில் ப்ரொமோஷன், தள்ளுபடி, பொழுதுபோக்கு மற்றும் பல புதிய சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனங்களின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறுகையில் “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 28 வது பதிப்பானது, உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாவாசிகளுக்கு துபாயில், அதன் பிரத்யேக நீண்ட ஷாப்பிங் ஃபெஸ்டிவலை அனுபவிக்க மற்றொரு வாய்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “இந்த DSF-ல், பொழுதுபோக்கு, உணவு, ஷாப்பிங் போன்ற பல்வேறு அனுபவங்களைக் கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் அனைவரையும் அழைக்கிறோம். எங்களுடன் இணைந்து, உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களின் மற்றொரு சீசனை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். அத்துடன் மற்றுமொரு மறக்க முடியாத நினைவுகளை உங்களுக்கு வழங்க தயாராயுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மெகா பரிசுகள்
DSF-ன் ரேஃபிள் டிராவில் பங்குபெறும் கடைகளில் இருந்து 500 திர்ஹம் மதிப்புள்ள தங்கம், வைரம் அல்லது முத்து நகைகளை வாங்குபவர்கள் 250 கிராம் தங்கத்தை வெல்லும் வாய்ப்பை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் DSF Mega Raffle டிக்கெட் வாங்குபவர்கள் ஒரு புத்தம் புதிய Nissan Patrol வெல்லக்கூடிய வாய்ப்பைப் பெறலாம் மற்றும் DSF பங்கேற்கும் மால்களில் ஷாப்பிங் செய்பவர்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 29 வரை 200 திர்ஹம்களுக்கு மேல் ஷாப்பிங் செய்தால் 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் DSF-ல் பங்குபெறும் 10 பிராண்டுகளில் இருந்து குறைந்தபட்சம் 500 திர்ஹம் செலவழித்து ஷாப்பிங் செய்பவர்கள் தினசரி டிவி, ஐபோன்கள், தங்கம் மற்றும் நகைகளை வெல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் DSF கிராண்ட் பரிசாக டவுன்டவுன் துபாயில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வெல்லும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வான வேடிக்கை
டிசம்பர் 16 முதல் ஜனவரி 29 வரை தினமும் இரவு 8:30 அல்லது 9 மணிக்கு புர்ஜ் அல் அரப், புளூவாட்டர்ஸ், துபாய் க்ரீக், அல் சீஃப், துபாய் ஃபிரேம், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் மற்றும் JBR ஆகிய இடங்களில் DSF வானவேடிக்கை நிகழ்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் DSF ட்ரோன் ஷோ இசை மற்றும் மிகவும் மேம்பட்ட 3D ட்ரோன் தொழில்நுட்பத்துடன் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் இது ஜுமேரா கடற்கரை குடியிருப்புக்கு எதிரே உள்ள தி பீச் மற்றும் புளூவாட்டர்ஸில் இரவு 7 மற்றும் இரவு 10 மணிக்கு என DSF நடைபெறும் காலம் முழுவதும் தினமும் இருமுறை காட்சிபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தாண்டு தினத்தன்று, நிகழ்ச்சி நேரங்கள் இரவு 8 மணிக்கும் 11 மணிக்கும் இருக்கும் என்றும் லேசர் ஷோ டிசம்பர் 23-24, ஜனவரி 13-14 மற்றும் ஜனவரி 27-28 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.