ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று பெய்த பலத்த மழை..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

Published: 26 Dec 2022, 5:51 PM |
Updated: 26 Dec 2022, 6:59 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான பகுதிகள் இன்று (திங்கள்கிழமை) மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், துபாயின் சில பகுதிகளில் இன்று மதியம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் இந்த வாரம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது. முன்னதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்தைக் குறிக்கும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

துபாயின் அல் பர்ஷா மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் போன்ற பகுதிகளில் இன்று மதியம் கனத்த மழை பெய்தது என்றும் அதே நேரத்தில் இன்று காலையில், அபுதாபியின் அல் தஃப்ரா மற்றும் கந்தூத் போன்ற பகுதிகளில் மழை பெய்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து NCM வெளியிட்ட ஒரு அறிக்கையில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அமீரகத்தில் மழை பெய்யும் என்ற கணிப்புடன் வெள்ளிக்கிழமை வரை மேகமூட்டமான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வானிலை மையம் சமூக ஊடகங்களில் பாதுகாப்பு அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது. இதன்படி சாலையில் பயணம் செய்யத் திட்டமிடும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தெரிவுத்தன்மை (visibility) குறையும் போது குறைந்த பீம் ஹெட்லைட்களை இயக்குமாறும் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றவும் மற்றும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்கவும் வாகன ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட ஒரு பதிவில், மழை பெய்யும் சமயங்களில் கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் மின்னணு சாலைப் பலகைகளில் காட்டப்படும் மாறுபட்ட வேக வரம்புகளைக் கடைப்பிடிக்குமாறும் வாகன ஓட்டிகளை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை மற்றும் மேகமூட்டமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி மற்றும் துபாயில் இரண்டு நாட்களிலும் வெப்பநிலை சுமார் 25°C ஆக இருக்கும் என்றும், இது மாலையில் 20°Cக்கு கீழே குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலையில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.