ADVERTISEMENT

UAE: கடன் பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டவர்..!! பத்திரமாக மீட்ட காவல்துறை..!!

Published: 11 Dec 2022, 9:23 PM |
Updated: 11 Dec 2022, 9:31 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய அஜ்மான் காவல்துறையானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஜ்மானில் உள்ள ஒரு மேம்பாலத்தில் இருந்து குதிக்க தயாரான இளைஞரின் செயலை தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

அஜ்மான் காவல்துறையின் தலைமை இயக்குநரான பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல்-மத்ருஷி கூறுகையில், “அஜ்மானின் ஒரு குறிப்பிட்ட பாலத்தில் இருந்து குதிக்க இருப்பதாக ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் மிரட்டல் விடுப்பதாக செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்ததும் உடனடியாக குற்றப் புலனாய்வுக் குழுவினரும், காவல் துறையினரும் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்குச் சென்றனர்” என தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் அவரின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல்துறையால் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அதிகாரிகள் எவ்வாறு இந்த சம்பத்தில் தலையிட்டு, குறுகிய நேரத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் செயலில் இருந்து அவரை தடுத்து நிறுத்தினர் என காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவர் பாலத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தபோது, ​​காவல்துறையின் நடுநிலையாளர்கள் அவரிடம் பேசி, இந்த செயலை செய்ய வேண்டாம் என்று அவரை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகின்றது. அதே சமயத்தில் ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் உரையாடலில் ஈடுபட்டபோது, ​​​​மற்றொரு நபர் அந்த நபரை பின்னால் இருந்து பிடித்ததாகவும், மேலும் இரண்டு அதிகாரிகள் அவரை அந்த பாலத்தின் விளிம்பில் இருந்து இழுத்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த இளைஞர் ஹமிதியா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் அந்த நபர் கடுமையான பண நெருக்கடியில் இருப்பதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்ததாகவும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டதாகவும் அதில், அவரின் மனநலம் பாதிக்கப்படவில்லை என தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அவரது கடனைத் தீர்ப்பதற்கும் அவரது பண பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவரது வழக்கானது சமூக காவல்துறைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.