ADVERTISEMENT

துபாய்: வெறும் 5 நிமிடங்களில் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸிற்கு விண்ணப்பிப்பது எப்படி..?? கட்டணம் எவ்வளவு..??

Published: 30 Jan 2023, 5:02 PM |
Updated: 30 Jan 2023, 5:13 PM |
Posted By: admin

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் விடுமுறை காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால், சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving License- IDL) என்பது நீங்கள் செல்லக்கூடிய நாட்டில் வாகனங்களை நீங்களே ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். அமீரகத்தில் நீங்கள் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தால், அமீரகத்திலேயே நீங்கள் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தையும் பெறலாம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்டோமொபைல் மற்றும் டூரிங் கிளப் (ATCUAE) இன் படி, IDL என்பது “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமம் ஆகும். இது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வாகனம் ஓட்டுவதற்கான சோதனைகள் மற்றும் விண்ணப்பங்கள் ஏதுமின்றி அமீரகத்திற்கு வெளியே சட்டப்பூர்வமாக ஓட்ட அனுமதிக்கிறது”.

மேலும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட IDL- ஆனது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இது குறித்து ATCUAE தனது இணையதளத்தில் “IDL-ன் முதன்மை செயல்பாடு, பிற நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க மற்றும் பிற அதிகாரிகள் உங்கள் உரிமத்தை அவர்களின் சொந்த மொழியில் படிக்க அனுமதிப்பதாகும்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

IDL செல்லுபடியாகும் வரை அதனை வைத்திருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இதைப் பயன்படுத்தலாம். ATCUAE இன் படி, குடியிருப்பாளர்கள் அமீரகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் அல்லது எமிரேட்ஸ் தபால் நிலையங்களுக்கு நேரில் சென்றால் 30 நிமிடங்களுக்குள் IDL ஐப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களும் நீங்கள் கோரிய முகவரிக்கு வழங்க ஐந்து வேலை நாட்கள் வரை ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் குடியிருப்பாளர்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தில் ஐந்து நிமிடங்களில் IDL க்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

UAE ஓட்டுநர் உரிமம்

எமிரேட்ஸ் ஐடி

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

சேவை கட்டணம்

RTA இணையதளம் துபாயில் ஒரு IDL ஐ வழங்குவதற்கான செலவாக 177 திர்ஹம்ஸை கட்டணமாக குறிப்பிடுகின்றது. மேலும், Knowledge and Innovation கட்டணங்களாக 20 திர்ஹம்ஸாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RTA கூறுகையில் “டிஜிட்டல் உரிமம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததால், வாடிக்கையாளர் ஓட்டுவதற்கு அசல் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் தேரா அல்லது அல் பர்ஷாவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் இருந்து இந்த உரிமத்தை விண்ணப்பதாரர்கள் பெறலாம். துபாயில், உங்களுக்கு IDL டெலிவரி செய்யப்பட வேண்டுமெனில், நார்மல் டெலிவரிக்கு 20 திர்ஹம் செலவாகும். நீங்கள் அதை ஒரே நாளில் டெலிவரி செய்ய விரும்பினால், கட்டணம் 35 திர்ஹம்ஸ் ஆகும். அதுவே இரண்டு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்ய விரும்பினால் 50 திர்ஹம்ஸ் செலவாகும்.

IDL வைத்திருப்பவர்கள் துபாயில் வாகனம் ஓட்ட முடியுமா?

IDL வைத்திருக்கும் விசிட் விசாவில் இருப்பவர்கள் துபாயில் இலகுரக வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டலாம் என RTA தெரிவித்துள்ளது. ட்ரான்ஸிட் விசா வைத்திருப்பவர்கள் துபாயில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை அவர்கள் செல்லுபடியாகும் IDL மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றிருந்தால் வாகனம் ஓட்டலாம்.