ADVERTISEMENT

விசா, எமிரேட்ஸ் ஐடிகளுக்கான கட்டணங்களை உயர்த்திய அமீரகம்.. உறுதி செய்த டிராவல் ஏஜென்ட்ஸ்..!

Published: 19 Jan 2023, 3:56 PM |
Updated: 19 Jan 2023, 4:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி மற்றும் விசா வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அமீரகத்தில் இருக்கக்கூடிய டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் டைப்பிங் சென்டர் ஏஜென்ட்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) வாடிக்கையாளர் பராமரிப்பு முகவர் ஒருவர் தெரிவிக்கையில், எமிரேட்ஸ் ஐடி மற்றும் விசா வழங்குவதற்கான கட்டணம் 100 திர்ஹம்கள் உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் இந்த கட்டண உயர்வு அனைத்து ICP சேவைகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எமிரேட்ஸ் ஐடி இப்போது 270 திர்ஹம்ஸிற்கு பதிலாக 370 திர்ஹம்ஸாக இருக்கும் என்றும் ஒரு மாத விசிட் விசா வழங்குவதற்கான கட்டணம் 270 திர்ஹம்ஸிற்கு பதிலாக 370 திர்ஹம்ஸாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் துபாயில் இருந்து வழங்கப்படும் விசிட் விசாவில் எந்த மாற்றமும் இல்லை என்று பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பயண முகவர் ஒருவர் கூறுகையில் “நாங்கள் இன்று துபாயில் ஒரு சில விசிட் விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளோம். அதில் கட்டணம் தொடர்பாக இன்னும் எந்த மாற்றத்தையும் காணவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மற்றொரு பயண முகவர் கூறுகையில் “நேற்று முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 100 திர்ஹம்ஸ் கட்டண உயர்வானது 30 மற்றும் 60 நாள் சுற்றுலா விசாக்கள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் அனைத்து இ-சேனல் சேவைகளுக்கும் பொருந்தும்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 60 நாள் சுற்றுலா விசாவிற்கான முகவர் கட்டணம் பயண ஒருங்கிணைப்பாளரைப் பொறுத்தது என்றும் பல்வேறு வகையான விசாக்கள் மற்றும் சேவைகளுக்கான சேவைக் கட்டணங்களை அவர்கள் நிர்ணயித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அமீரகத்தில் சமீபத்தில் நடைமுறைக்கு வந்த விசா சீர்திருத்தங்களைத் தொடர்ந்து தற்பொழுது இந்த கூடுதல் கட்டணமும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் என்ட்ரி பெர்மிட் மற்றும் ரெசிடென்ஸி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. இந்த மாற்றங்களில் விரிவுபடுத்தப்பட்ட கோல்டன் விசா திட்டம், புதிய ஐந்தாண்டு கிரீன் விசா, பல நுழைவு சுற்றுலா விசா உள்ளிட்ட பல புதுவித விசாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் சமீபத்திய நடைமுறைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாக்களை இனி நீட்டிக்க நாட்டை விட்டு வெளியேறி புதிய விசாவில் திரும்பி வர வேண்டும், நாட்டில் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களின் அபராதத்தொகையில் மாற்றம் போன்றவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.