அமீரக செய்திகள்

துபாய்-ஹத்தா இடையே புதிதாக துவங்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேருந்து வசதி..!! எப்படி அணுகுவது..??

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் துபாய்க்கும் ஹத்தாவிற்கும் இடையே உள்ள பயணிகளுக்கான பொது போக்குவரத்து சேவைகளை ஆதரிப்பதற்காக விரைவு பேருந்து வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வசதிகள் மற்றும் சேவைகளில் விரிவான மேம்பாடுகளை பெற்று வரும் ஹத்தாவிற்குள்ளேயும் புதிதாக பேருந்து வழித்தடம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் வழித்தடமான H02, ஹத்தா எக்ஸ்பிரஸ், துபாய் மால் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி, ஹத்தா பேருந்து நிலையத்திற்கு இரண்டு மணிநேர இடைவெளியில் பேருந்து சேவைகளை இயக்கும் என்றும் இதற்காக 25 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வழித்தடமான H04, ஹத்தாவிற்குள் செயல்படும் ஒரு சுற்றுலா சேவையாகும். இந்த பாதையானது ஹத்தா பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி அதே இடத்திலேயே முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஹத்தாவில் இருக்கும் நான்கு சுற்றுலா அடையாளங்களான ஹத்தா வாடி ஹப், ஹத்தா ஹில் பார்க், ஹத்தா டேம் மற்றும் ஹெரிடேஜ் வில்லேஜ் ஆகியவற்றை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு 2 திர்ஹம் என்ற கட்டணத்தில் 30 நிமிட இடைவெளியில் இந்த சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முக்கிய வழித்தடங்களை இயக்குவது, துபாய்க்கும் ஹத்தாவிற்கும் இடையே உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!