அமீரக செய்திகள்

துபாய்: கீழே கடந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பணம்.. காவல் நிலையத்தில் ஒப்படைத்த இந்தியர்.. நேர்மையை கவுரவித்த காவல் அதிகாரிகள்..!!

துபாயின் பர்துபாய் பகுதியில் பொது இடத்தில் கிடந்த பணத்தை கண்டெடுத்த இந்தியர் ஒருவர் அதனை நேர்மையாக துபாய் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.

பர்துபாய் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த உபேந்திர நாத் சதுர்வேதி என்பவர் 134,930 திர்ஹம் (இந்திய ரூபாயில் 30 லட்சம்) மதிப்புள்ள பணம் பொது வெளியில் கிடப்பதை கண்டுள்ளார். அவர் பணத்தை கண்டெடுத்ததும் நேரடியாக அந்த பகுதியில் இருக்கும் அல் ரஃபா காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

பணத்தை நேர்மையாக ஒப்படைத்த இந்தியர் உபேந்திர நாத்தின் நேர்மையை அல் ரஃபா காவல் நிலையத்தின் இயக்குநர் கர்னல் உமர் முகமது பின் ஹம்மாத் வெகுவாக பாராட்டியதுடன், அவரின் செயலுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி துபாய் காவல்துறை அதிகாரிகள் கவுரவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உபேந்திர நாத் தெரிவிக்கையில் துபாய் காவல் துறையினர் தன்னை கவுரவித்தது பெரும் பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்ததாகவும், அதற்காக காவல் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ஒருவர் தொலைத்த பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை கண்டெடுத்து அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் நேர்மையான குடியிருப்பாளர்களை காவல் அதிகாரிகள் கவுரவிக்கும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை 2022 இல், டேக்ஸியில் ஒருவர் விட்டுச் சென்ற 1 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை கண்டெடுத்த டேக்ஸி ஓட்டுனரையும், அதே போன்று ஜூன் மாதம் ஒரு கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஒருவர் விட்டுச்சென்ற 1 மில்லியன் திர்ஹம் பணத்தை கண்டெடுத்த குடியிருப்பாளர் ஒருவரையும் துபாய் காவல்துறையினர் கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!