அமீரக செய்திகள்

UAE: ப்ளூ காலர் தொழிலாளர்களுக்காக திறக்கப்பட்ட பிரத்யேக “அவசர சிகிச்சை பிரிவு”.. 24 மணி நேரமும் இயங்கும் எனவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆயிரக்கணக்கான ப்ளூ காலர் தொழிலாளர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், அவர்களுக்கென்றே சேவை செய்வதற்காக, ஒரு பிரத்யேக அவசர சிகிச்சை பிரிவு அபுதாபியின் முசாஃபா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் தொழில்துறை பகுதியான முசாஃபாவில் அமைந்துள்ள லைஃப்கேர் ஹாஸ்பிடல் ஆனது, அவசர சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ததை தொடர்ந்து, ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அவசர சிகிச்சை வழங்க அபுதாபி சுகாதாரத் துறை (DoH) உரிமம் வழங்கியுள்ளது.

அனுபவம் வாய்ந்த அவசர மற்றும் அதிர்ச்சி சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு திறக்கப்பட்டுள்ள இந்த புதிய துறையானது, 999 மூலம் காவல்துறைக்கு அழைக்கப்படும் உடனடி மருத்துவ சேவை உட்பட, தொழில்துறை மற்றும் தொழில்சார் கட்டுமான இடங்களில் ஏற்படும் காயங்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியிடத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் ஏற்படும் சிறிய காயங்கள் முதல் பக்கவாதம், தீக்காயங்கள், வடுக்கள், எலும்பு முறிவுகள், நசுக்கப்பட்ட காயங்கள், தலையில் காயங்கள், இருதய அவசரநிலைகள், ஆஸ்துமா போன்ற அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை அவசரநிலைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கும் வசதி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் அல்-ஷம்ரி, “பல ஆண்டுகளாக, முசாஃபாவின் தொழில்துறை பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை அளித்து வருகிறோம். சிகிச்சையை விரைவாகவும், திறமையாகவும், துல்லியமாகவும் வழங்க, மேம்பட்ட மருத்துவ மற்றும் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் சான்று அடிப்படையிலான நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அபுதாபி சுகாதாரத் துறையிடம் இருந்து அவசர சிகிச்சைக்கான உரிமத்தைப் பெறுவதன் மூலம், நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழுவினரை கொண்டு இப்பகுதி மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.

லைஃப்கேர் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக அறுவை சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவை, முசாஃபா நகராட்சி மற்றும் முசாஃபா காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!