அமீரக செய்திகள்

UAE: குளோபல் வில்லேஜிற்கு நேரடி ‘பொது பேருந்து சேவை’-யை தொடங்கிய எமிரேட்..!! குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!

துபாயின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான குளோபல் வில்லேஜுக்கு ​​ராஸ் அல் கைமாவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் நேரடியாக செல்ல வசதியாக பொது பேருந்து வசதி தற்போது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. ​​ராஸ் அல் கைமா மற்றும் குளோபல் வில்லேஜ் இடையே இயக்கப்படவுள்ள இந்த பேருந்தின் ஒரு வழி டிக்கெட்டின் விலை 30 திர்ஹம்சாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடும்ப பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜிற்கு செல்ல விரும்பும் குடியிருப்பாளர்களின் அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், குளோபல் வில்லேஜ் மற்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஒத்துழைப்புடன், ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) இந்த சிறப்பு பேருந்து வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு பேருந்து சேவை மட்டுமே தற்போது கிடைக்கும் என்றும், இந்த பேருந்துகளை ராஸ் அல் கைமாவில் இருந்து குளோபல் வில்லேஜுக்கு பிற்பகல் 3 மணி மற்றும் மாலை 5 மணிக்கும், குளோபல் வில்லேஜில் இருந்து ​​ராஸ் அல் கைமாவிற்கு இரவு 10 மணி மற்றும் அதிகாலை 12 மணிக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

30 திர்ஹம்ஸ் கட்டணத்தில் இயக்கப்படவுள்ள இந்த பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் RAKBus என்ற ஸ்மார்ட் பயன்பாட்டின் மூலமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியையும் ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பேருந்து சேவை கடந்த டிசம்பர் 16, 2022 அன்று தொடங்கப்பட்ட சோதனை முயற்சியை தொடர்ந்து தற்போது நிரந்தர பேருந்து சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழித்தடம் குறித்து RAKTA இன் தரம் மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் முகமது ஹாஷேம் எஸ்மாயில், ராஸ் அல் கைமாவில் இன்டர்சிட்டி பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கும், அனைவருக்கும் பொதுப் போக்குவரத்தை எளிதாக்குவதற்கும் ​​ராஸ் அல் கைமா அரசு எடுத்து வரும் மூலோபாய திட்டங்களுக்கு ஏற்ப இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!