ADVERTISEMENT

UAE: காருக்குள் சாப்பிடுவது, புகைபிடிப்பது, மேக்கப் போடுவதற்கு அபராதம் மற்றும் கருப்பு புள்ளிகள்.. காவல்துறை எச்சரிக்கை..!!

Published: 17 Jan 2023, 12:05 PM |
Updated: 17 Jan 2023, 12:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டும் போது ஓட்டுனரின் கவனச்சிதறல் காரணமாக ஏற்படும் வாகன விபத்துகளுக்கு அபராதமும், கரும்புள்ளிகளும் விதிக்கப்படும் என்று அமீரக காவல்துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் மொபைல் ஃபோன்களின் பயன்பாடு தவிர, உணவு உண்ணுதல், அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட செயல்கள் கவனச்சிதறல் ஏற்பட காரணமாக இருப்பதாகவும், இத்தகைய செயல்களுக்கு 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த அனைத்து அபாயகரமான விபத்துக்களில், 13 சதவிகிதம் கவனச்சிதறல் மூலமாக நடந்த வாகன விபத்துகள் எனவும், உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆபத்தான விபத்துகளுக்கான காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவது அல்லது குடிப்பது எப்படி கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகளை 80 சதவீதம் அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மேலும் வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் செலுத்துவது குறைந்த விபத்து விகிதங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் ITC மேற்கோள்கட்டியுள்ளது.

அமீரகத்தின் போக்குவரத்துக்கு விதிகள் 2017 மற்றும் அமைச்சரவை தீர்மானம் எண்.178 இன் விதிகளின் படி, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், இணையதளத்தில் உலாவுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுத்தல் போன்றவை கவனச்சிதறலுக்கான காரணிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இது தவிர, வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதல், குடித்தல், புகைபிடித்தல் மற்றும் மேக்கப் பயன்படுத்துதல் போன்றவையும் கவனச்சிதறலுக்கான காரணிகள் எனவும், இது ஒரு வாகன ஓட்டியை சாலையில் கவனம் செலுத்துவதைத் தடுக்கும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தை பொறுத்தவரை அலுவலகத்திற்கோ அல்லது பணிபுரியும் இடத்திற்கோ குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடைய அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகள் பலரும், காலையில் வாகனம் ஓட்டிக்கொண்டே டீ அல்லது காபி குடிப்பது மற்றும் சிற்றுண்டி உண்பது என்பது காலம் காலமாகவே தொடர்ந்து வரும் நிகழ்வு என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.