ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் இன்று பெய்த மழை..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..

Published: 23 Jan 2023, 5:20 PM |
Updated: 23 Jan 2023, 5:26 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்த சில மணி நேரங்களிலேயே பல பகுதிகளில் பலத்த மழையை அமீரகம் கண்டது. இதன் காரணமாக துபாயில் வெப்பநிலை 22º C ஆகவும் மலைப் பகுதியில் 4º C ஆகவும் குறைந்தது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் துபாய் மற்றும் ஷார்ஜாவின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி துபாயின் தேராவில் வசிப்பவர்கள் பிற்பகலில் அதிக மழை பெய்ததாக அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து துபாயின் அல் வர்கா, துபாய் சர்வதேச விமான நிலையம், அல் அவீர், அல் கவானீஜ், நாத் அல் ஹமர், அல் ரஷிதியா, ராஸ் அல் கோர் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபுதாபியை பொறுத்தவரை அல் அய்ன், ஜபெல் ஹஃபீத், அல் பதா பகுதியிலும் மிதமான மழை பெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவை மட்டுமல்லாமல் அபுதாபி மற்றும் ஃபுஜைரா சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகளிலும், அல் தஃப்ரா பகுதியிலும், இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியுள்ளனர். அபுதாபி காவல்துறையினர் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், மழையின் போது வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக ஓட்டவும், உள் மற்றும் வெளிப்புற சாலைகளில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் நிலையற்ற காலநிலை எதிர்பார்க்கப்படுவதால், வீதியில் பயணிப்பவர்கள் தமது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் வானிலை குறித்த தகவலை தெரிந்து கொள்ளுமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு இடையில் போதுமான தூரத்தை விட்டுவிட வேண்டும், வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதற விட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் நிலையற்ற வானிலையின் போது அபுதாபியில் வேக வரம்பு தானாகவே குறைக்கப்பட்டு சாலையில் உள்ள மின்னணு பலகைகளில் கடைபிடிக்க வேண்டிய வேகம் காட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே போல் ராஸ் அல் கைமா காவல்துறையினரும் தங்கள் சமூக ஊடகங்களில் பாதுகாப்பு வீடியோவை வெளியிட்டு மழையின் போது பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளனர். அது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

  • சாலையில் தெரிவு நிலை (visibility) குறைவாக இருந்தால் மெதுவாக வாகனத்தை ஓட்டவும்
  • குறைந்த வேக பாதைகளில் ஓட்டவும்,
  • தேவைப்படும் போது மட்டும் பாதையை மாற்றவும்
  • வாகனம் முற்றிலும் நிறுத்தப்படும் போது அல்லது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் போது மட்டுமே அபாய விளக்குகளைப் பயன்படுத்தவும்.
  • மழையின் போது மலைப்பகுதியில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்
  • பகல் நேரத்தில் வாகனம் ஓட்டும்போது குறைந்த பீமை (low beam) இயக்கவும்
  • வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்
  • வாகனத்தின் பிரேக் மற்றும் டயர்களையும் விண்ட்ஸ்கிரீன் வைப்பர்ஸையும் தவறாமல் சரிபார்க்கவும்