அமீரக செய்திகள்

துபாய்: முக்கிய சாலையில் வேக வரம்பை குறைத்த RTA.. உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தகவல்..!!

துபாயின் ஒரு முக்கிய சாலையில் வேக வரம்பு குறைக்கப்பட்டிருப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. அதாவது துபாய்-ஹத்தா இடையேயான சாலையில் வேக வரம்பு 100 கிலோ மீட்டரில் இருந்து 80 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வேக வரம்பானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய், அஜ்மான் மற்றும் அல் ஹோஸ்ன் ரவுண்டானா இடையே சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை இருக்கக்கூடிய சாலையில் இந்த வேக வரம்பை குறைத்துள்ளது. இதனால் மணிக்கு 100 கிமீ வேகத்தைக் காட்டும் தற்போதைய வேக வரம்புப் பலகைகள் 80 கிலோ மீட்டராக மாற்றப்பட்டுள்ளன.

சாலையில் வேகக் குறைப்பு ஆரம்பிக்கும் இடத்தில், இது குறித்து ஓட்டுநர்களை எச்சரிக்க சிவப்பு கோடுகள் கொண்டு சாலைகள் குறிக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. RTA மற்றும் துபாய் காவல்துறை தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் இந்த வேகக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் RTA துபாயின் முக்கிய சாலைகளில் வேக வரம்புகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையிலும் ஹத்தா மாஸ்டர் டெவலப்மென்ட் திட்டத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலும் இந்த வேக குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனவே இப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!