ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்கள் இனி ஆறு மாதத்திற்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கினாலும் அமீரகத்திற்கு திரும்பலாம்.. புதிய விசா நடைமுறை அமல்..!!

Published: 30 Jan 2023, 8:57 AM |
Updated: 30 Jan 2023, 9:14 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸி விசாவை வைத்திருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறையானது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தற்பொழுது அவ்வாறு அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்கள் இப்போது மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அனுமதியைப் பெறுவதற்கு அத்தகைய குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக நாட்டிற்கு வெளியே தங்கியிருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் மற்றும் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அமீரகத்தில் இருக்கும் பயண மற்றும் டைப்பிங் சென்டர் முகவர்கள் இதற்கான அறிவிப்பைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளத்தில் குடியிருப்பாளர்கள் இந்த சேவைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தச் சேவையானது ‘6 மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்குவதற்கான அனுமதியை வழங்குதல்’ (Issue permit for staying outside UAE over 6 months) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதை ‘ஸ்மார்ட் சேவைகள்’ என்பதன் கீழ் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் விண்ணப்பதாரர் ICP இலிருந்து ஒப்புதல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னரே மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் செயல்முறைக்கு சுமார் ஐந்து நாட்கள் ஆகும் என கூறப்படுவதோடு இந்த சேவையைப் பெற, விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஸ்பான்சர்களின் விவரங்கள், அத்துடன் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு தொடர்பான தகவல்களை உள்ளிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விண்ணப்பத்தில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பதற்கான காரணத்தை குறிப்பிடுமாறு கேட்கப்பட்டிருக்கும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக அமீரகத்தின் ரெசிடென்ஸி விசாவை வைத்திருப்பவர் 180 நாட்கள் நாட்டிற்கு வெளியே தங்கினால், அவர்களின் விசா தானாகவே ரத்து செய்யப்படும். இருப்பினும் விதிவிலக்காக கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், தேவைப்படும் காலம் வரை வெளிநாட்டில் தங்கினாலும் அவர்களின் விசா பாதிப்பாகாது என்பது நடைமுறையில் இருந்து வரும் விதிமுறையாகும்.

இந்நிலையில் தற்பொழுது அறிவித்திருக்கும் இந்த புதிய நுழைவு அனுமதி முறையானது, சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விசா மற்றும் ரெசிடென்ஸி அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களில் புதியதொரு செயல்முறையாகும்.

இது மட்டுமல்லாது சமீபத்தில் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளை வழங்குவது உட்பட ICP சேவைகளைப் பெறுவதற்கான கட்டணம் இந்த மாத தொடக்கத்தில் 100 திர்ஹம்ஸ் உயர்த்தப்பட்டது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாக்களை இனி நீட்டிக்க முடியாது என்றும், விசிட் விசா வைத்திருப்பவர்கள் தொடர்ந்து தங்குவதற்கு நாட்டை விட்டு வெளியேறி புதிய விசாவில் திரும்பி வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ICP சமீபத்தில் நாட்டில் விசா காலம் முடிந்தும் தங்குவதற்கான அபராதத்தில் மாற்றங்களையும் அறிவித்துள்ளது. அதில் சுற்றுலா மற்றும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் காலாவதியான தேதிக்கும் பின் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 100 திர்ஹம்களுக்குப் பதிலாக 50 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் ரெசிடென்ஸி விசாவில் இருப்பவர்கள் ஒரு நாளுக்கு 25 திர்ஹம்களுக்குப் பதிலாக 50 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.