ADVERTISEMENT

UAE: வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் பண உதவி பெற 10 நிபந்தனைகளை வெளியிட்ட அமீரக அரசு.. சிறப்பு தொகுப்பு..!!

Published: 7 Jan 2023, 12:32 PM |
Updated: 12 Feb 2023, 7:47 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமீரக அரசு கட்டாயமாக்கியது. மேலும் இந்த திட்டத்தில் இணைவதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்து, காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஊழியர்கள் மீது ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அமீரக அரசின் இந்த வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் நபர் ஒருவர், வேலையை இழந்த நாளிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதத்தை உதவி தொகையாக பெற முடியும். எனினும், வேலையை இழக்கும் நபர் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பண உதவி தொகையை பெறுவதற்கு 10 குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் 2022 இன் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 13 இல் பிரிவு எண் 5, மற்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானம் 2022 இன் தீர்மானம் எண். 97 இல் பிரிவு எண் 9 ஆகியவற்றில் இந்த நிபந்தனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பை இங்கே காண்போம்.

ADVERTISEMENT

1. வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பண உதவி தொகையை பெறுவதற்கு, நீங்கள் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாத சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

2. வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி, அனைத்து காப்பீட்டு பிரீமியங்களையும் நீங்கள் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

ADVERTISEMENT

3. பணிபுரியும் வேலையை நீங்களாகவே ராஜினாமா செய்யாமல் வேறு காரணங்களால் வேலையை இழந்தால், அதற்கான சான்றுகளை நீங்கள் வழங்க வேண்டும்.

4. தனியார் துறை மற்றும் மனித வளங்களில் தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களின்படி, ஒழுங்கு நடவடிக்கை காரணங்களுக்காக நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது.

5. நீங்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டால் உங்களை டெர்மினேட் செய்த நாளிலிருந்து அல்லது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் பண உதவி தொகையை பெறுவதற்கான உரிமைகோரல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

6. பண உதவியை பெறுவதற்கான உரிமைகோரல் விடுக்கும் நபர் தலைமறைவானவர் என்ற பட்டியலில் இருக்க கூடாது.

7. இழப்பீடு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் உரிமைகோரல் மோசடியாகவோ அல்லது ஏமாற்றக்கூடியதாகவோ இருக்கக்கூடாது. அதேபோல், நீங்கள் பணிபுரிந்ததாக கூறப்படும் நிறுவனமும் கற்பனையாக இருக்கக்கூடாது.

8. வேலையை விட்டு நீக்கப்பட்ட நபர் பின்னர் வேறொரு வேலையில் பணியமர்த்தப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை நிறுத்தப்படும்.

9. வேலையை விட்டு நீக்கப்பட்ட நபர் முதலாளிக்கு எதிராக ஸ்ட்ரைக் அல்லது மற்ற அமைதியற்ற போராட்டங்களில் ஈடுபட்டு அதனால் வேலையை இழந்திருக்க கூடாது.

10. காப்பீடு செய்த நபர் இழப்பீடு பெறுவதற்கு நாட்டில் சட்டப்பூர்வ குடியிருப்பு இருப்பது அவசியம்.

வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சட்டத்தின் பிரிவு எண் 12 ன் படி, வேலையை இழந்து பண உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் இழப்பீடு பெறும் உரிமையைப் பெற்ற நபருக்கு, கோரிக்கையைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குள் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனிகள் பணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.