அமீரக செய்திகள்

UAE: ‘உலகின் சிறந்த வேலை’-க்கான போட்டி.. 367,000 திர்ஹம்ஸ் சம்பளம்.. போட்டியிட நீங்கள் தயாரா..?

வெளிநாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வரும் பலருக்கும் அவர்களின் கனவுகள் நனவாகும் ஒரு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருந்து வருகிறது. அமீரகத்தில் பணிபுரிந்து வரும் குடியிருப்பாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிக்கேற்ப சிறிய சம்பளம் முதல் பெரிய சம்பளம் வரை என வரி இல்லாத சம்பளத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட வெவ்வேறு நாட்டவர்கள் அமீரகத்தை தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், அமீரகத்தில் பணிபுரிவதை இன்னும் கவர்ச்சிகரமாக ஆக்கும் விதத்தில் “உலகின் சிறந்த வேலை (World’s Best Job)” என்ற தலைப்பில் ஒரு போட்டி ஒன்று அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்ட் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு 100,000 அமெரிக்க டாலர் (367,000 திர்ஹம்ஸ்) சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நடிகரும் நகைச்சுவை நடிகருமான கெவின் ஹார்ட்டால் அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில், 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். யாஸ் ஐலேண்டிற்கு தூதராக ஒருவரை நியமிக்க நடத்தப்படும் இப்போட்டியில் பங்குகொள்ள விரும்பும் போட்டியாளர்கள், அவர்கள் தூதராக இருந்தால் யாஸ் ஐலேண்டிற்கு உயிர்ப்பூட்ட என்னவெல்லாம் செய்வார்கள் என்பது பற்றி ஒரு வீடியோவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

367,000 திர்ஹம்ஸ் சம்பளத்திற்கான வேலைக்கு நடத்தப்படவிருக்கும் இந்த போட்டியில் ஜனவரி 9 முதல் ஜனவரி 23 வரை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கேற்கும் வேட்பாளர்களில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து நபர்களின் விபரங்கள், ஜனவரி 26 அன்று யாஸ் ஐலேண்டின் சமூக ஊடக சேனல்களில் அறிவிக்கப்படும்.

போட்டியின் இரண்டாவது சுற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வேட்பாளர்களும் நேரடி வானொலி நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர் பின்னர் இறுதியாக பிப்ரவரி 3, 2023 அன்று நேரடியாக அறிவிக்கப்படுவார்.

போட்டி விவரங்கள்

– அனுப்பப்படும் வீடியோக்கள் 60 வினாடிகள் வரை இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு 100 மெகாபைட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் வீடியோ சரியான வடிவத்திலும் அளவிலும் பதிவேற்றப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இறுதித் தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் வீடியோக்கள் பரிசீலிக்கப்படாது.

– வன்முறை, நிர்வாணம், அவதூறு மற்றும்/அல்லது சட்டவிரோதமான பொருட்கள் அல்லது செயல்பாடு ஆகியவற்றைக் கொண்ட வீடியோக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கப்படும்.

– வீடியோக்களை hireme.yasisland.com என்ற வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் பகிரவும் பதிவேற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– வெற்றியாளர் ‘யாஸ் ஐலேண்டின் தூதுவராக’ சமூக ஊடகங்கள் மற்றும் PR கடமைகளை மேற்கொள்வார் மற்றும் யாஸ் ஐலேண்டை முன்னணி ஓய்வு மற்றும் சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பார்.

இது தவிர, இந்த போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு அபுதாபி வர பிசினெஸ் கிளாஸ் டிக்கெட், 60 நாட்களுக்கு W அபுதாபி ஹோட்டலில் தங்கும் வசதி, சொகுசு கார், யாஸ் லிங்க்ஸ் கோல்ஃப் பேக்கேஜில் 60 நாள் கிளப் மெம்பர்ஷிப் மற்றும் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி, யாஸ் வாட்டர்வேர்ல்ட், வார்னர் பிரதர்ஸ் வேர்ல்ட் அபுதாபி உள்ளிட்ட தீம் பார்க்குகளுக்கு வரம்பற்ற அணுகலுக்காக இரண்டு கோல்ட் வருடாந்திர பாஸ்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!