ADVERTISEMENT

UAE: உரிமம் இல்லாமல் மருத்துவ துறையில் பணிபுரிபவர்களுக்கு சிறை தண்டனை, 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..!!

Published: 13 Jan 2023, 5:05 PM |
Updated: 13 Jan 2023, 5:39 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசிடம் இருந்து முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இத்தகைய உரிமம் இல்லாமல் அமீரகத்தில் பணிபுரிபவர்கள் அரசின் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான்.

ADVERTISEMENT

அதில் தற்பொழுது அமீரகத்தின் புதிய கூட்டாட்சி சட்டத்தின்படி, உரிமம் இல்லாமல் ஐக்கிய அரபு அமீ்ரகத்தில் மருத்துவ நிபுணராகப் பணிபுரியும் எவருக்கும் 100,000 திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் ஃபெடரல் நேஷனல் கவுன்சில் (FNC), நாட்டில் சில சுகாதாரத் தொழில்களின் நடைமுறை மற்றும் தனியார் சுகாதார மையங்கள் தொடர்பான 2015 ஆம் ஆண்டிற்கான ஃபெடரல் சட்ட எண்.4 இன் பல விதிகளைத் திருத்துவதற்கான இரண்டு வரைவுச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சில சுகாதாரத் தொழில்களின் நடைமுறை குறித்த புதிய சட்டத்தின்படி, உரிமம் பெறாமல் மருத்துவ சேவையை வழங்குபவர்கள் அல்லது உரிமம் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் மருத்துவ சேவையை வழங்குபவர்களுக்கு, சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம் முதல் 100,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு தண்டனைகளில் ஒன்று விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த சட்டத்தின்படி, மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதற்கு தவறான ஆவணங்கள் அல்லது தகவல்களை வழங்குபவர்கள் அல்லது சட்டவிரோத மருத்துவ நடைமுறைகளை பின்பற்றினாலும், அதிகாரிகள் அதே தண்டனையை விதிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக சுகாதாரத் தொழிலில் ஈடுபடும் மையத்தை மூடவும் இந்த சட்டம் அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.