அமீரக செய்திகள்

ஒரு சதுர அடியின் விலை ரூ.2.9 இலட்சம்.. துபாய் வரலாற்றிலேயே அதிக பட்ச விலைக்கு விற்கப்பட்ட அபார்ட்மெண்ட்..

ஆடம்பர வில்லாவிற்கும், அபார்ட்மெண்ட்டிற்கும் பெயர் போன துபாயில், இதுவரை இல்லாதளவு வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சதுர அடி மட்டுமே 13,000 திர்ஹம்ஸிற்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 2.9 இலட்சம்) மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

துபாயில் இருக்கும் பல்கேரி ரிசார்ட் அண்ட் ரெசிடென்ஸியில் உள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பானது, ஒரு சதுர அடிக்கு 13,543 திர்ஹம்ஸ் என்ற விலையில் விற்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபார்ட்மெண்ட் முழுவதுமாக 42.9 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற விலையுடன் விற்கப்பட்டிருந்தாலும், இதுவே துபாயில் இதுவரை இல்லாதளவிற்கு ஒரு சதுர அடிக்கான அதிகபட்ச விலையாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு பல்கேரி ரிசார்ட் மற்றும் ரெசிடென்ஸ்ஸில் ஒரு சதுர அடிக்கு 12,624 திர்ஹம்ஸ் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு அபார்ட்மெண்ட் 40 மில்லியன் திர்ஹம்ஸ் விலைக்கு விற்கப்பட்டது. அதுவே இதுவரையிலும் ஒரு சதுர அடி கணக்கில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இடம் என்ற சாதனையை படைத்திருந்தது. தற்பொழுது அந்த சாதனையை அதே பல்கேரி ரிசார்ட் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அதிக வசதி படைத்த நபர்களின் வருகையால் துபாயின் ஆடம்பர சொத்துக்கான தேவையானது கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இது வரையில்லாத அளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2022 இல் 4,000 மில்லியனர்கள் துபாய்க்கு வருவார்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் இந்த போக்கு தொடர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, துபாயானது 410 மில்லியன் டாலர் மதிப்புள்ள மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட் விற்பனையை சமீபத்தில் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சொத்து ஆலோசகர் நைட் ஃபிராங்கின் கூற்றுப்படி, துபாயின் 10 மில்லியன் டாலருக்கும் மேலான மதிப்பில் உள்ள அபார்ட்மெண்ட் மற்றும் வில்லாக்களின் தேவையானது பெரிய அளவில் அதிகரிப்பைக் கண்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் தொற்றுநோய்க்குப் பிறகு வசதி படைத்தவர்களும் மில்லியனர்களும் துபாய்க்கு பெருமளவில் வந்துள்ளதால் கடந்த ஆண்டு இந்த விற்பனை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் $10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களுக்கான சுமார் 219 பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன என்றும், இது துபாயில் 2021ம் ஆண்டில் 93 ஆக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிடுகையில் ஆடம்பர வீடுகளுக்கான தேவை கடந்த ஆண்டு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவன் பிராப்பர்டீஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அலஜாஜி கூறுகையில் “துபாய் தற்போது உலகின் மிக முக்கிய பொருளாதார சந்தையாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு குடியிருப்பு சொத்துப் பிரிவில் துபாய் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவிசார் அரசியல் ரீதியாக பாதுகாப்பான நகரத்தில் சரியான முதலீட்டைத் தேடும் குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு துபாய் மிகவும் கவர்ச்சிகரமான இடமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

டிரைவன் ப்ராப்பர்டீஸின் அசோசியேட் பார்ட்னர்களான லினா அல்லாவோ மற்றும் கியானூஷ் தர்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள தரகர்கள் ஆவர். அத்துடன் துபாயில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வீட்டு மனை, ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த டவுன்ஹவுஸ் மற்றும் இதற்கு முந்தைய சாதனையான ஒரு சதுர அடிக்கு 12,624 திர்ஹம்ஸ் மதிப்பிலான அடுக்கு மாடி குடியிருப்பு போன்ற ஒப்பந்தங்களின் பின்னணியிலும் செயல்பட்டவர்கள் இவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!