ADVERTISEMENT

UAE: முழுமையடைந்த எதிஹாட் ரயில் பணிகள்.. சேவையை தொடங்கிவைத்த துபாய் ஆட்சியாளர்.. ரயிலில் பயணிக்கும் வீடியோவுடன் ட்வீட்..!!

Published: 25 Feb 2023, 3:42 PM |
Updated: 25 Feb 2023, 4:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நேற்று வியாழக்கிழமை (பிப்.23) அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய மெகா தேசிய நெட்வொர்க் திட்டமான எதிஹாட் ரயிலின் சரக்கு ரயில் சேவையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். அபுதாபியின் அல் ஃபயா பிராந்தியத்தில் உள்ள பிரதான கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு மையத்தில் இருந்து ஷேக் முகமது அவர்கள் சரக்கு வலையமைப்பை தொடங்கி வைத்ததாக மாநில செய்தி நிறுவனம் WAM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சுமார் 38 இன்ஜின்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வேகன்களுடன் (wagon) அனைத்து வகையான பொருட்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்ட சரக்கு ரயில்களின் செயல்பாட்டை தொடங்குவது குறித்து ஷேக் முஹம்மது அவர்கள் தனது ட்விட்டரில், ஐக்கிய அரபு அமீரகம் இன்று தேசிய இரயில் நெட்வொர்க்கை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது, இது நாட்டின் பொருளாதராத்தை மேம்படுத்த முக்கியப் பங்காற்றும் மற்றும் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களில் 70 சதவீதம் உள்ளூர் தொழில் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் இந்த ரயில்வே நெட்வொர்க்கை ஒரு தேசிய மூலோபாய திட்டம் என்று அழைத்த ஷேக் முஹம்மது அவர்கள், இது 2050 ஆம் ஆண்டிற்குள் 200 பில்லியன் திர்ஹம்கள் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது சாலை பராமரிப்பு செலவில் 8 பில்லியன் திர்ஹம்களை மிச்சப்படுத்தும் என்றும், ரயில் நெட்வொர்க்கின் சுற்றுலா மூலம் 23 பில்லியன் வரை பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் எல்லையில் அமைந்துள்ள குவைஃபத் (Ghuweifat) இடத்திலிருந்து ஃபுஜைரா வரை அமைக்கப்பட்டுள்ள அமீரகத்தின் இந்த தேசிய நெட்வொர்க் திட்டமான எதிஹாட் ரயிலின் திறப்பு விழாவை, ஷேக் முகமது அவர்கள் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் அவர் தனது ட்விட்டரில் வரிசையாக பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அந்த வீடியோ காட்சிகளில், அபுதாபியின் அல் ஃபயாவில் உள்ள கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு மையத்தில் அவர் பயணிகள் ரயிலுக்குள் (passenger train) பார்வையிடுவதற்காக சென்றதும், அவர் ரயிலுக்குள் உள்ள திட்டம் பற்றிய விளக்கத்தை அவர் கேட்பதும் பதிவாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உட்பட லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பல தலைவர்களும், அமீரகத்தின் உயர் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

எதிஹாட் ரயிலின் பணிகள் முழுமையடைந்து தற்போது அமீரகம் முழுவதும் சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், பயணிகள் ரயில் சேவையின் தொடக்கத்திற்கான சரியான தேதி பற்றிய அறிவிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமீரகத்தின் 11 முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும்பட்சத்தில், 2030-ஆம் ஆண்டிற்குள் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பயணிகள் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்ததும் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து புஜைராவிற்கு 100 நிமிடங்களிலும் பயணிக்க முடியும். இதனால் பயணிகளின் பயண நேரம் 40 சதவீதம் வரை குறையும். கடந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின் போது, ​​பயணிகள் ரயிலின் முதல் முன்மாதிரி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதும், அப்போது அமீரக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிற எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் உட்பட பல தலைவர்கள் பார்வையாளர்களாக கை அசைத்து ஆரவாரம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.