ADVERTISEMENT

துபாய்: பணத்தை செலுத்த இனி உங்கள் முகத்தை காட்டினாலே போதும்.. கார்டு, பணம் தேவையில்லை.. புதிய டெக்னாலஜி அறிமுகம்..!!

Published: 15 Feb 2023, 7:53 AM |
Updated: 15 Feb 2023, 8:05 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல்முறையாக வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை, கடைகளில் உள்ள செக் அவுட் கவுண்டரில் கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது பணமாகவோ செலுத்தாமல், தங்கள் முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுமைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெயர்பெற்ற துபாயில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள “ஃபேஸ் பே (Face Pay)” என அழைக்கப்படும் இந்த நவீன பணம் செலுத்தும் முறையை, கேரிஃபோர் (Carrefour) மற்றும் துபாயை தளமாகக் கொண்ட நெட்ஒர்க் இன்டர்நெஷனல் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது.

மேலும் பணம் செலுத்துதல் மற்றும் நுழைவு போன்ற செயல்பாடுகளுக்கு, முக அங்கீகாரத்தின் (Face Recognization) மூலம் தனிநபரின் அடையாளத்தை சரிபார்த்து பணம் செலுத்த, நுகர்வோர் அங்கீகரிப்பு சேவை வழங்குநரான PopID யுடன் இணைந்து இந்த புதிய பணம் செலுத்தும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் தேரா (Deira) மற்றும் அம்சஃப் (Amsaf) பகுதியில் உள்ள கேரிஃபோர் கிளைகளில் முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.10) முதல் இந்த Face pay முறையானது வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் Face Pay-யில் பதிவு செய்திருந்தால், பணத்தைச் செலுத்த அவர்கள் கடைகளின் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை எனவும், கவுண்டர்களில் உள்ள ஸ்கேனரில் தங்களின் முகத்தை மட்டும் காட்டிவிட்டு வெளியேறினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகத்தை காட்டி பணம் செலுத்தும் இந்த புதிய தொழில்நுட்பமானது இன்னும் குறிப்பிட்ட சில கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் எனவும், கூடிய விரைவில் அமீரகம் முழுவதும் உள்ள கடைகளில் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செக் அவுட் கவுண்டர்களில் விரைவாகவும், வசதியாகவும், தடையற்ற சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், சில மோசடியிலிருந்து வணிகங்களைப் பாதுகாப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து Majid Futtaim ரீடெய்ல் நிறுவனத்தின் GCC தலைமை இயக்க அதிகாரி பெர்னார்டோ கூறுகையில், “சிக்கலை நீக்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் கேரிஃபோர் என்றும் முன்னணியில் உள்ளது. இந்த பாதுகாப்பான, தடையற்ற புதிய கட்டண முறைக்கு சில வினாடிகள் மட்டுமே ஆகும். மேலும் PopID மற்றும் Network International உடன் இணைந்து இதை அமீரகம் முழுவதும் வெளியிடும் முதல் சில்லறை விற்பனையாளர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய முக அங்கீகார கட்டணத்தைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் முதலில் Carrefour மொபைல் அப்ளிக்கேஷன் அல்லது அதன் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.