அமீரக செய்திகள்

விண்ணப்பித்து 24 மணி நேரத்திற்குள் எமிரேட்ஸ் ஐடி இனி உங்கள் கையில்.. ICP வழங்கும் புதிய சேவை இதோ!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ, குடியிருப்பாளர்கள் புதிய ஐடியை பெறுவதற்கு எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கும் வகையில், ஒரு புதிய சேவை குறித்த விபரங்களை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) வெளியிட்டுள்ளது.

ICP ஆணையத்தால் ‘ஃபவுரி (Fawri)’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அவசரச் சேவையின் மூலம், தொலைந்துபோன எமிரேட்ஸ் ஐடிக்கு பதிலாக புதிய எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பித்து, வெறும் 24 மணி நேரத்திற்குள் குடியிருப்பாளர்கள் தங்கள் ஒரிஜினல் எமிரேட்ஸ் ஐடியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சேவையை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) கூடுதல் சேவைக் கட்டணத்துடன் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ‘Fawri’ சேவையானது அமீரகத்தில் வசிக்கும் UAE மற்றும் GCC நாட்டினருக்கும், வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆகையால், அனைத்து வயதினரும் இந்த சேவையின் மூலம் மாற்று எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பித்து புதிய ஐடியை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

எமிரேட்ஸ் ஐடி தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ என்ன செய்ய வேண்டும்?

உங்கள் எமிரேட்ஸ் ஐடி கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, உங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஆவணங்களுடன் அருகிலுள்ள ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்திற்குச் சென்று முதலில் உங்கள் ஐடி கார்டை செயலிழக்கச் செய்ய புகார் அளிக்க வேண்டும். அதுவே சேதமடைந்திருந்தால் பழைய எமிரேட்ஸ் ஐடியை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

‘Fawri’ சேவையைப் பெற என்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்?

UAE நாட்டவர்களுக்கு செல்லுபடியாகும் ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் பேமிலி புக், GCC நாட்டு குடிமக்களுக்கு அமீரகத்தில் வசிப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணம் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு ரெசிடென்சி விசாவை நிரூபிக்கும் ஆவணம் மற்றும் ஒரிஜினல் பாஸ்போர்ட் எடுத்து செல்ல வேண்டும். அதுவே 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சேவையை பெற, குழந்தையின் ஒரிஜினல் பிறப்புச் சான்றிதழையும், வெள்ளை பின்னணியில் வண்ண பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் வழங்க வேண்டும்.

‘Fawri’ சேவையை பெற தகுதியானவர் யார்? எதற்காகப் பயன்படுத்தலாம்?

— அமீரகத்தில் வசிக்கும் UAE மற்றும் GCC நாட்டவர்கள் முதல் முறையாக எமிரேட்ஸ் ஐடி கார்டுகளை வழங்கவும், காலாவதியான கார்டுகளை புதுப்பிக்கவும் அல்லது தொலைந்து போன அல்லது சேதமடைந்த கார்டுகளை மாற்றவும் இந்த சேவையை பயன்படுத்தப்படலாம்.

— அமீரகத்தில் வசிக்கக்கூடிய GCC நாட்டினர் அல்லாத வெளிநாட்டினர்கள், தங்களின் தொலைந்து போன அல்லது சேதமடைந்த எமிரேட்ஸ் ஐடி கார்டுகளை மாற்றிக்கொள்ளுவதற்கு மட்டும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

‘Fawri’ சேவையை பெற கட்டணம் எவ்வளவு?

தொலைந்த அல்லது சேதமடைந்த எமிரேட்ஸ் ஐடியை மாற்ற, விண்ணப்பதாரர்கள் டைப்பிங் சென்டர் மூலம் விண்ணப்பித்தால், சேவை கட்டணமாக 300 திர்ஹம்களுடன் சேர்த்து 70 திர்ஹம்ஸ் விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதேசமயம், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் 300 திர்ஹம்களுடன் சேர்த்து விண்ணப்பக் கட்டணமாக (eForm) 40 திர்ஹம்களும் செலுத்த வேண்டும். அதுவே எக்ஸ்பிரஸ் சர்வீஸ் மூலம் பெற விரும்பினால் அதற்கு கட்டணமாக 150 திர்ஹம்ஸ் கூடுதலாக வசூலிக்கப்படும்.

‘Fawri’ சேவையைப் பெற ICP வாடிக்கையாளர்கள் அணுக வேண்டிய மையங்கள் எவை?

  • அபுதாபியில் அல் ஜசீரா மற்றும் கலீஃபா சிட்டி (Al Jazeera and Khalifa City in Abu Dhabi)
  • துபாயில் அல் பர்ஷா, அல் ரஷிதியா மற்றும் கராமா (Al Barsha, Al Rashidiya and Karama in Dubai)
  • மேற்கு பிராந்தியத்தில் மதீனத் சயீத்  (Madinat Zayed in the Western Region)
  • அல் அய்ன் மையம் (Al Ain Centre)
  • ஷார்ஜா மையம் (Sharjah Centre)
  • அஜ்மான் மையம் (Ajman Centre)
  • புஜைரா மையம் (Fujairah Centre)
  • ராஸ் அல் கைமா மையம் (Ras Al Khaimah Centre)
  • உம் அல் குவைன் மையம் (Umm Al Quwain Centre)

மேற்கூறியபடி, வாடிக்கையாளர்கள் எமிரேட்ஸ் ஐடியை மாற்றிக்கொள்ள விண்ணப்பித்தவுடன் ICP யிலிருந்து கார்டு டெலிவரி குறித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின்னர் எமிரேட்ஸ் போஸ்ட் ஆபிஸை தொடர்பு கொள்வதன் மூலம் விண்ணப்பதாரர்கள் மாற்று விண்ணப்பத்தை சமர்ப்பித்த 24 மணி நேரத்திற்குள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களின் மொபைல் போனிலிருந்து UAE ICP ஆப்பை டவுன்லோட் செய்து அதன் மூலமும் இந்த சேவைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!