அமீரக செய்திகள்

UAE: ரெசிடென்ஸி, வேலை, விசிட் விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விசா நிலையை தெரிந்து கொள்வது எப்படி..??

வெளிநாட்டினர்கள் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ரெசிடென்ட் விசா, வேலைவாய்ப்பு விசா அல்லது சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்த பின்னர், அந்த விசாக்களின் விண்ணப்ப நிலையை கண்காணிக்க அமீரக அரசாங்கத்தால் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விசாவின் நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது பற்றி இங்கே காணலாம்.

அமீரக நாட்டில் ஏதேனும் ஒரு விசாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தனது விசாவின் விண்ணப்ப நிலையை கண்காணிக்க தேவைப்படும் விபரங்களில் பின்வருவனவை மிகவும் முக்கியமானதாகும்.

  • விண்ணப்ப எண் (Application number)
  • பரிவர்த்தனை எண் (Transaction number)
  • விசா கட்டணம் செலுத்திய தேதி
  • விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபரின் பிறந்த தேதி அல்லது பாஸ்போர்ட் எண்

எனவே, பயண முகவர்கள் மூலமாகவோ அலலது எந்தவொரு விசா சேவை வழங்குநரிடமோ விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்ப எண் மற்றும் அதன் பரிவர்த்தனை எண்ணை வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகும். இவற்றின் மூலம் விண்ணப்ப நிலையை நாமே கண்காணித்து அதற்கேற்ப நம் பயணத்தை திட்டமிடலாம்.

விசா விண்ணப்ப நிலையை கண்காணித்தல் (துபாய் தவிர்த்து மற்ற எமிரேட் விசா):

அமீரக விசா பெறுவதற்கு விண்ணப்பதாரர் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் அல்லது ஃபுஜைரா ஆகிய இந்த எமிரேட்டுகளில் ஏதேனும் ஒரு எமிரேட்டில் விண்ணப்பித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) ஃபெடரல் ஆணையத்தின் இணையதள லிங்கில் சென்று அவரது விண்ணப்ப நிலையை கண்காணிக்க முடியும்.

ICP லிங்க்: https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html

விசா நிலையை சரிபார்க்க இந்த லிங்கில் சென்றவுடன், முதலில் விசா விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு, உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிகளை தேர்வுசெய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் விபரங்கள் உள்ளிட்ட பிறகு, அடுத்ததாக ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும். இதனை அடுத்து விண்ணப்பம் செயல்படுத்தப்படுகிறதா அல்லது விசா வழங்கப்பட்டதா என்பது திரையில் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

விசா விண்ணப்ப நிலையை கண்காணித்தல் (துபாய் விசா):

விண்ணப்பதாரர் துபாயில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள துபாய் பொது இயக்குனரகத்தின் (GDRFA) லிங்கில் சென்று, அதில் கேட்கப்படும் விபரங்களை உள்ளிடுவதன் மூலம் தங்களின் விசா விண்ணப்ப நிலையை கண்காணித்து கொள்ளலாம்.

GDRFA லிங்க்: https://smart.gdrfad.gov.ae/Public_Th/StatusInquiry_New.aspx

இந்த லிங்கில் உள்நுழைந்தவுடன், விசா விண்ணப்ப எண், பரிவர்த்தனை எண் மற்றும் விசாவுக்கான கட்டணம் செலுத்திய தேதியை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு, உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் வசதியை தேர்வு செய்து, ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் விசாவின் நிலை திரையில் காண்பிக்கப்படும்.

இது மட்டுமில்லாமல், விண்ணப்பதாரர் ‘DubaiNow’ என்ற ஆப் மூலமும், விசா விண்ணப்ப நிலை மற்றும் செல்லுபடியாகும் காலத்தை கண்காணிக்க முடியும். இந்த ஆப் மூலம் விண்ணப்பநிலையை அறிய பின்வரும் வழிகளை பின்பற்ற வேண்டும்.

— DubaiNow ஆப்பில் உள்நுழைந்தவுடன், ‘Residency’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்தபடியாக, ‘Check Visa Status’ என்பதைக் கிளிக் செய்தவுடன், இந்த ஆப் வழங்கும் சேவையின் விபரம் திரையில் தோன்றும்.

— அப்போது ‘Ok, I understand’ என்பதை கிளிக் செய்துவிட்டு, இறுதியாக விண்ணப்ப எண், பரிவர்த்தனை எண் மற்றும் பணம் செலுத்திய தேதி ஆகியவற்றை உள்ளிட்டு, ‘Submit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர், விசா விண்ணப்பம் செயல்படுத்தப்படுகிறதா அல்லது விசா வழங்கப்பட்டதா என்பது உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!