சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது பொதுவாகவே அனைத்து நாடுகளும் பின்பற்றும் நடைமுறையாகும். அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ம் ஆண்டில் சுமார் 10,500 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடரப்பட்ட இந்த 10,576 நபர்களில் தலைமறைவானவர்கள், அமீரகத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள், போலி குடியிருப்பு அனுமதி அல்லது விசாக்களை உருவாக்கியவர்கள், அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள், ரெசிடென்ஸி விசாக்கள் காலாவதியானவர்கள் மற்றும் விசிட் விசாவில் வேலை செய்து அதிகாரிகளிடம் பிடிபட்டவர்கள் போன்றவர்கள் அடங்குவர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அமீரகத்தின் ஃபெடரல் பப்ளிக் பிராசிகியூஷன் ஃபார் நேஷனலிட்டி மற்றும் ரெசிடென்ஸ் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் முடிக்கப்பட்டதை உறுதி செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சட்ட விரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 ம் ஆண்டில் 10,790 பேர் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் என வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பகுதி நேர வேலையை சட்டப்பூர்வமாக்குதல்
2010 ஆம் ஆண்டு முதல், அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு முழு நேர வேலையுடன் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் மற்றுமொரு பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது. இருப்பினும் இவர்கள் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திடம் (MoHRE) பணி அனுமதி பெற்ற பின்னரே பகுதி நேரமாக வேலை செய்ய முடியும்.
இவ்வாறு வேலை செய்ய விரும்பும் அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர் பகுதி நேர பணி அனுமதி பெறுவதற்கான கட்டணத்தில் விண்ணப்பக் கட்டணம் 100 திர்ஹம் மற்றும் ஒப்புதல் கட்டணம் 500 திர்ஹம் ஆகியவற்றை செலுத்த வேண்டியருக்கும்.
கடந்த 2007 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 2 இன் படி, ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி பணிபுரிந்தால், பணியமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஓவர்ஸ்டே அபராதம்
அடையாளம் மற்றும் குடியுரிமை மற்றும் சுங்கம் மற்றும் துறைமுகங்களுக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களுக்கான அபராதங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, விசிட், சுற்றுலா மற்றும் ரெசிடென்ஸ் விசாவில் செல்லுபடி காலம் முடிந்தும் தங்குவதற்கான கட்டணம் ஒரு நாளுக்கு 50 திர்ஹம்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெசிடென்ஸி விசா காலாவதியாகியும் அமீரகத்தில் தொடர்ந்து தங்கியிருந்தால் ஒவ்வொரு நாளும் 50 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும். இது முன்னர் 25 திர்ஹம்ஸாக இருந்தது. அதே போல் விசிட், சுற்றுலா விசா முடிந்தும் தங்கியிருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் 50 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும். இது முன்னர் 100 திர்ஹம்ஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.