அமீரக செய்திகள்

அமீரக அரசு அறிவித்துள்ள புதிய ‘ரீஎன்ட்ரி பெர்மிட்’ விதி.. கட்டணம், அபராதம் பற்றிய கூடுதல் தகவல்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய ரீஎன்ட்ரி பெர்மிட் விதியின்படி, ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருந்து செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள், சரியான காரணத்தை தெரிவிப்பதன் மூலம் நாட்டிற்குள் மீண்டும் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, UAE ரெசிடென்சி விசா பெற்றவர்கள் வெளிநாட்டில் தொடர்ந்து 180 நாட்களுக்கு மேல் தங்கினால், அவர்களின் ரெசிடென்சி விசாக்கள் தானாகவே ரத்து செய்யப்படும். ஆனால் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த புதிய சேவையின் மூலம், அத்தகைய குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

அமீரக அரசின் இந்த புதிய ரீஎன்ட்ரி பெர்மிட் சேவையை பயன்படுத்தி, நாட்டிற்குள் நுழைய விண்ணப்பித்த பல குடியிருப்பாளர்கள் மீண்டும் அதே விசாவில் திரும்பி வந்துள்ளதாக பயண முகவர்கள் கூறியுள்ளனர். எனினும் அமீரகத்திற்கு வெளியே அவர்கள் தங்கியிருந்த நாட்களுக்கு அபராதம் மற்றும் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டும் ரீஎன்ட்ரி பெர்மிட் இல்லாமலேயே அமீரகம் திரும்புவதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. அது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம்.

ரீஎன்ட்ரி பெர்மிட்டிற்கான அபராதம் மற்றும் கட்டணம் எவ்வளவு?

ICP அறிவித்த இந்த சேவையைப் பெறுவதற்கான மொத்தச் செலவு என்பது, அமீரக குடியிருப்பாளர் ஒருவர் நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் நாட்களை பொறுத்து மாறுபடும். அதில் குறைந்தபட்சமாக 100 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும். அதாவது ஒரு குடியிருப்பாளர் 30 நாட்கள் அலலது அதற்கும் குறைவான நாட்களுக்கு அமீரகத்திற்கு வெளியே தங்கியிருந்தால், அவருக்கு அபராதமாக 100 திர்ஹம் வசூலிக்கப்படும்.

அதுவே ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டிற்கு வெளியே ஒருவர் தங்கியிருந்தால், அதற்கான அபராத தொகையானது ஒவ்வொரு மாதத்திற்கும் 100 திர்ஹம்ஸ் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். இது தவிர, ICA க்கான சேவை கட்டணமாக சுமார் 150 திர்ஹம்ஸ் அபாரதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். கூடுதலாக, பயண முகவர்கள் மூலம் இந்த சேவைக்கு விண்ணப்பித்தால் அதற்கான கட்டணம் நிறுவனங்களை பொறுத்து மாறுபடலாம்.

ரீஎன்ட்ரி பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்த சேவையை பெற விரும்பும் குடியிருப்பாளர்களின் விண்ணப்பமானது, அமீரகத்திற்கு வெளியில் இருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பாஸ்போர்ட்டின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான காரணத்தையும், ஆதாரத்தையும் அவர்கள் குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.

ரீஎன்ட்ரி பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்காமல் அமீரகம் திரும்பி வர தகுதியுடையவர்கள் யார்?

ஆறு மாதத்திற்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கிய அனைத்து வகை குடியிருப்பாளர்களும் ரீஎன்ட்ரி பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ICP வலைத்தளத்தின் படி, குறிப்பிட்ட ஒரு சில பிரிவினர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • கோல்டன் விசா பெற்றவர்கள்.
  • முதலீட்டாளர்கள்.
  • வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் துபாய் ரெசிடென்சி விசா பெற்ற மாணவர்கள்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிற நாட்டு தூதரகம் மற்றும் தூதரக பிரதிநிதிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள்.
  • ஒரு எமிராட்டி குடிமகனின் வெளிநாட்டு மனைவி.
  • வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை பெற்ற எமிராட்டியுடன் செல்லும் வீட்டு உதவியாளர்கள்.
  • நோயாளிகளுடன் பயணம் செய்யும் அல்லது வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் எமிராட்டியுடன் அழைத்து செல்லப்படும் வீட்டு உதவியாளர்கள்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து, சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குடியிருப்பாளர் மற்றும் அவரின் உதவியாளர்.
  • வெளிநாட்டில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் தூதரக பணிகளின் உறுப்பினர்களுடன் பயணிக்கும் வீட்டு உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள்.
  • பயிற்சி அல்லது சிறப்புப் படிப்புகளில் கலந்துகொள்வதற்காக தங்கள் முதலாளிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது வெளிநாட்டில் உள்ள தங்கள் எமிராட்டி முதலாளிகளின் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள்.
  • ICP இன் முடிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு குடியிருப்பாளர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!