சவூதி அரேபியாவில் குடியுரிமை, பணி மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 16,105 பேரை சவூதி அரேபிய அரசு கைது செய்துள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 16 ம் தேதி முதல் 22 ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும், குடியுரிமை விதிகளை மீறியதற்காக மொத்தம் 9,551 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், அதே நேரத்தில் 3,977 பேர் சட்டவிரோத எல்லையை கடக்கும் முயற்சிகளுக்காகவும், மேலும் 2,577 பேர் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளளது.
மேலும், சட்டவிரோதமாக ராஜ்யத்திற்குள் நுழைய முயன்றதற்காக 393 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுளளது. அதில் 36 சதவீதம் பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், 52 சதவீதம் பேர் எத்தியோப்பியா மற்றும் 12 சதவீதம் பேர் பிற நாட்டினர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர 37 பேர் அண்டை நாடுகளுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டதாகவும், மேலும் 23 பேர் அத்துமீறுபவர்களை ஏற்றிச் சென்று அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும் சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் கூறுகையில், ராஜ்யத்திற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவுபவர்கள், போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்குவது உட்பட சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 1 மில்லியன் ரியால்ஸ் வரை அபராதம் அல்லது வாகனங்கள் பறிமுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும், நாட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான விதி மீறல்கள் குறித்து மக்கா மற்றும் ரியாத் பிராந்தியங்களில் 911 என்ற இலவச எண்ணிலும், ராஜ்யத்தின் பிற பகுதிகளில் 999 அல்லது 996 என்ற எண்ணிலும் குடியிருப்பாளர்கள் புகாரளிக்கலாம் எனவும் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.