அமீரக செய்திகள்

UAE: விமான பயணிகளின் வசதிக்காக இரண்டாவது “சிட்டி செக்-இன்” சேவையை திறந்த அபுதாபி..!! எங்கு தெரியுமா..??

அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாகவும், பயணிகள் தங்களுடன் எடுத்து செல்லும் லக்கேஜ்களுக்கான போர்டிங் செயல்முறைகளை விமான நிலையம் செல்வதற்கு முன்பாகவே முடித்துக்கொள்ள வசதியாகவும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது சிட்டி செக்-இன் சேவை தற்போது ADNEC (Abu Dhabi National Exhibition Company) பகுதியில் கடந்த புதன்கிழமை (பிப். 22) முதல் பொதுமக்களின் பயண்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC) தொடங்கப்பட்டிருக்கும் இந்த சிட்டி செக்-இன் சேவையானது, ADNEC-ல் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (International Defence Exhibition and Conference – Idex) மற்றும் ஏழாவது கடற்படை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (Naval Defence and Maritime Security Exhibition – Navdex) ஆகியவற்றில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு முதலில் வழங்கப்படும் என்றும், பின்னர் நாளை சனிக்கிழமை (பிப்.25) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடைபெற்று வரும் Idex மற்றும் Navdex பாதுகாப்பு கண்காட்சியில் சுமார் 65 நாடுகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 350 அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தற்போது முதற்கட்டமாக அவர்கள் இங்கே திறக்கப்பட்டுள்ள சேவையை பயண்படுத்தி செக்-இன் செய்து போர்டிங் பாஸைப் பெறுவதன் மூலம், சிரமம் இல்லாமல் விமான நிலையம் செல்லலாம் என்று இந்த சேவையை தொடங்கியுள்ள மொராபிக் ஏவியேஷன் சர்வீசஸ் (Morafiq Aviation Services) நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன் கண்காட்சியில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகளுக்கான செக்-இன் சேவை இன்று வெள்ளிக்கிழமையுடன் (பிப்ரவரி 24) முடிவடைந்த பிறகு, நாளை முதல் பொதுமக்கள் இங்கே செக்-இன் சேவையைப் பெறலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ADNEC-ல் அமைந்துள்ள இந்த சிட்டி செக்-இன் சேவை முதற்கட்டமாக எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways), ஏர் அரேபியா (Air Arabia), விஸ் ஏர் (Wizz Air), எகிப்து ஏர் (Egypt Air) ஆகிய விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயண்படுத்திக்கொள்ள விரும்பும் பயணிகள், தங்கள் விமானம் புறப்படுவதற்கு 4 முதல் 24 மணி நேரம் வரையிலான இடைப்பட்ட நேரங்களில் செக்-இன் செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு கட்டணமாக தலா ஒரு பயணிக்கு 35 திர்ஹம்கள் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் விமான நிலையம் சென்றடைந்தவுடன் நேரடியாக இமிக்ரேஷன் கவுண்டர் (Immigration Counter) சென்று தங்களின் செயல்முறைகளை விரைவாக முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சிட்டி செக்-இன் மையத்தில் லக்கேஜ் நடைமுறைகளை முடிப்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதலாக இருக்கும் பொருட்களை கொண்டு செல்ல விரும்பாதவர்கள் அதனை வீட்டிற்கு மீண்டும் எடுத்து செல்ல முடியும் எனவும், அல்லது கூடுதல் லக்கேஜிற்கு பணம் செலுத்த விரும்பும் பயணிகள் அதற்கான கட்டணத்தை சிட்டி செக்-இன் மையத்தில் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தின் கிராண்ட்ஸ்டாண்டின் தரை தளத்தில் உள்ள Adnec Concourse இல் அமைந்துள்ள இந்த சிட்டி செக்-இன் மையம், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றும், இதன் மூலம் அபுதாபி சிட்டிக்கு வெளியே அல் முஸ்ரிஃப் (Al Mushrif) முதல் முஸாஃபா (Mussafah) மற்றும் அதற்கு அப்பால் வரை உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி விமான நிலையத்தின் முதலாவது சிட்டி செக்-இன் சேவை, அபுதாபி சிட்டியிலிருந்து பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சையத் துறைமுகத்தில் உள்ள அபுதாபி குரூஸ் டெர்மினலின் முனையம் 1 ற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அபுதாபி சிட்டிக்கு வெளியே வசிக்கும் குடியிருப்பாளர்களின் வசதிக்காக ADNEC பகுதியில் இரண்டாவது சிட்டி செக்-இன் சேவை தற்போது திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பயணிகள் 800 667 2347 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!