வளைகுடா செய்திகள்

ஒரு மாதமாக காணாமல் தேடப்பட்டு வந்த தமிழர்.. விபத்தில் உயிரிழப்பு.. குவைத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்..!!

குவைத்தில் கடந்த ஒரு மாத காலமாக காணாமல் போய்விட்டதாக தேடப்பட்டு வந்த தமிழர் ஒருவர் இறந்துவிட்டதாக வெளிவந்த தகவலானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத்தில் பணிபுரிந்து வந்த சுரேஷ் குமார் செல்வராஜ் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் குவைத்தின் சால்மியா பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலானது தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குவைத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் அவரை தேடியிருக்கின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும் அவர் எங்கிருக்கிறார் என்பதை அவரது குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து குவைத்தில் உள்ள அவரது நண்பர்கள் சமூக சேவகரான மதி என்பவரை தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து இந்த விசயமானது குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. பின் குவைத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களில் இவரை தேடியிருக்கின்றனர். இறுதியாக அவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது தெரிய வந்திருக்கின்றது.

குவைத்தின் சால்மியா பகுதியில் உள்ள பலாஜாத் ஸ்ட்ரீட்டில் கடந்த ஜனவரி 9 ம் தேதி கார் மோதி உயிரிழந்த நான்கு பேரில் ஒருவர் சுரேஷ் என்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதன் பின் தேவையான நடைமுறைகள் இந்திய தூதரகத்தின் மூலம் முடிக்கப்பட்டு அவரது உடலானது பிப்ரவரி 10 ம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவகர்களான மதி மற்றும் அலிபாய் இந்திய தூதரகத்துடன் இணைந்து சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை அடையாளம் காணவும், பின் அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் வரையிலும் உதவியதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!