ADVERTISEMENT

துருக்கி-சிரியா பூகம்பம்: Gallant Knight / 2 ஆபரேஷனை அறிவித்த அமீரகம்.. 50 மில்லியன் திர்ஹம்ஸில் மனிதாபிமான உதவி.. கள மருத்துவமனைகள் அமைக்கும் திட்டம்..!!

Published: 7 Feb 2023, 7:51 AM |
Updated: 7 Feb 2023, 8:41 AM |
Posted By: admin

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களினால் பல கட்டிடங்கள் சிதைந்ததுடன் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் துருக்கியில் நேற்று காலை, மதியம், மாலை என அடுத்தடுத்து மூன்று சக்தி வாய்ந்த பூகம்பங்களால் அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருக்கு இரண்டு தனித்தனி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த அழைப்புகளில், இரு நாடுகளையும் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதோடு, தனது ஆதரவையும் ஒற்றுமையையும் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிபர், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடும் முயற்சிக்கு மீட்புக் குழுவை அனுப்பவும், கள மருத்துவமனையை நிறுவவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேடும் முயற்சிக்கு ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழுவை அனுப்பவும், அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளை வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதனையொட்டி ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், சிரியா மற்றும் துருக்கி மக்களுக்கு உதவி வழங்குவதற்காக, “கேலண்ட் நைட் / 2 (Gallant Knight / 2)” நடவடிக்கையை அமீரகம் துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் ஆயுதப்படைகள், உள்துறை அமைச்சகம், வெளியுறவு துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் ஆகியவற்றின் பங்கேற்பு அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவியானது சிரியா மற்றும் துருக்கியை தாக்கிய பூகம்பத்தின் விளைவுகளைத் தணிக்க அவசர நடவடிக்கையின் கட்டமைப்பிற்குள் வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முதலுதவி விமானமானது அபுதாபியில் இருந்து தெற்கு துருக்கியின் அடானா விமான நிலையத்திற்கு, தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் புறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவற்றுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் திர்ஹம்கள் மதிப்பிலான அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.