ADVERTISEMENT

ஜனவரி 2023 முதல் அமலுக்கு வந்த புதிய சுங்க வரியை ரத்து செய்த துபாய்.. புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட துபாய் கஸ்டம்ஸ்..!!

Published: 4 Mar 2023, 5:10 PM |
Updated: 4 Mar 2023, 5:12 PM |
Posted By: admin

துபாயிலிருந்து சர்வதேச அளவில் 300 திர்ஹம்களுக்கு மேல் ஷாப்பிங் செய்யும் பொருட்களுக்கு புதிய சுங்க வரியை (Customs Duty) இரு மாதங்களுக்கு முன்பு துபாய் அரசு அறிமுகப்படுத்தியது. துபாய் கஸ்டம்ஸின் 2022 இன் அறிவிப்பு எண்.5-ன் படி, இந்த புதிய சுங்க வரி சட்டம் ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக நடைமுறையிலும் இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி சர்வதேச அளவில் 300 திர்ஹம்களுக்கு மேல் வாங்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இந்த புதிய சுங்க வரியை ரத்து செய்வதாக துபாய் கஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 1, 2023 முதல் துபாயிலிருந்து சர்வதேச அளவில் ஷாப்பிங் செய்யப்படும் பொருட்கள் மற்றும் பார்சல்களுக்கு அளிக்கப்படும் விலக்குக்கான வரம்பு Dh300 லிருந்து முந்தைய வரம்பான Dh1,000 திற்கு மீண்டும் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் கஸ்டம்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “சர்வதேச அளவில் ஷாப்பிங் செய்யப்படும் பொருட்களில் AED 300/-க்கு கீழ் மதிப்புள்ள சரக்குகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான சுங்க அறிவிப்பு 5/2022 இன் கட்டுரை (2) இன் பக்கம் (a) இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதையும், மார்ச் 1, 2023 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை பார்சல்கள் மற்றும் ஷிப்மென்ட்களுக்கு விலக்கு அளிப்பதற்கான முந்தைய வரம்பு AED 1,000/- ஐ மீண்டும் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், 300 திர்ஹம்களுக்கு மேல் சர்வதேச அளவில் ஷாப்பிங் செய்யும் குடியிருப்பாளர்கள், இனிமேல் அந்த பொருட்களுக்கு ஐந்து சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் (VAT) சேர்த்து, ஐந்து சதவீத இறக்குமதி சுங்க வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, இதற்கு முன்னர் அமலில் இருந்த விதியின்படி 1,000 திர்ஹம்களுக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே சுங்க வரி செலுத்த வேண்டும்.

எனினும், 1000 திர்ஹம்களுக்கு குறைவான மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் புகையிலை, புகையிலை பொருட்கள், இ-சிகரெட்டுகள், நிகோடின் திரவம், மதுபானங்கள் மற்றும் ஆல்கஹால் கொண்ட உணவுகள் ஆகியவை சுங்க வரி விலக்கில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புகையிலை, புகையிலை பொருட்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கான திரவங்கள் ஆகியவற்றிற்கு பாவ வரியுடன் (Sin Tax) சேர்த்து கூடுதலாக 200 சதவீதம் என்ற விகிதத்தில் அதிக சுங்க வரி விதிக்கப்படும்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக 2017 ஆம் ஆண்டில், கார்பனேட்டட் பானங்கள், ஆற்றல் பானங்கள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கலால் வரி (Excise Tax) அறிமுகப்படுத்தப்பட்டதும், பின்னர் மின் புகைபிடிக்கும் சாதனங்கள் மற்றும் கருவிகள், அத்தகைய சாதனங்களில் பயன்படுத்தப்படும் திரவங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் போன்றவற்றையும் கலால் வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.