ADVERTISEMENT

தமிழர்களின் பழமையான உடற்பயிற்சி கலையை அமீரகத்திலும் பரவச் செய்யும் தமிழச்சி.! ஒரு சிறப்பு கலந்துரையாடல்..

Published: 2 Mar 2023, 1:19 PM |
Updated: 2 Mar 2023, 2:33 PM |
Posted By: admin

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்து வாழும் தமிழர்களின் பெருமையை பட்டிதொட்டி எங்கும் பறை சாற்ற, பண்டையகால தமிழர்களிடையே இருந்த பண்பாடும், கலாச்சாரமும் தான் ஊன்றுகோலாய் அமைகிறது. அப்படிப்பட்ட பண்டையகால தமிழர்கள் தங்களின் உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் பலவிதமான உடற்பயிற்சி முறைகளை கடைபிடித்து வந்தனர். அதில் ஒன்றுதான் கரலாக்கட்டையை கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி முறையாகும்.

ADVERTISEMENT

தமிழர்களின் பழமையான இந்த உடற்பயிற்சி முறையை நம்மில் பெரும்பாலானோர் தற்போது மறந்துவிட்ட நிலையில், அதனை முறையாக பயின்று, சான்றிதழும் பெற்று தற்போது இதை அமீரகம் வரை கொண்டு சேர்த்து, மற்றவருக்கும் பயிற்றுவித்து வருகிறார் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரியதர்ஷினி. அபுதாபியில் கணவருடன் வசித்துவரும் பிரியதர்ஷினியிடம், அவரை பற்றியும், அவருக்கு எவ்வாறு இந்த கரலாக்கட்டை உடற்பயிற்சி முறையில் ஆர்வம் வந்தது என்பது பற்றியும் நாம் பல கேள்விகளை கேட்டோம்.

அதற்கு, இந்தியாவிலேயே இத்தகைய பழம்பெரும் கரலாக்கட்டை பயிற்சியை பயின்று, சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை படைத்தது மட்டுமில்லாமல், சர்வதேச கரலாகட்டை விளையாட்டு கூட்டமைப்பால் (International karlakattai sports federation) 2021 ம் ஆண்டுக்கான சத்திரிய விருதும் பெற்றுள்ள பிரியதர்ஷினி, பல சுவாரஸ்யமான பதில்களையும், கரலாக்கட்டை உடற்பயிற்சி முறையினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நம்மிடம் விரிவாக பகிர்ந்துகொண்டார். அது பற்றிய தொகுப்பை கீழே பார்க்கலாம்.

ADVERTISEMENT

கரலாக்கட்டை உடற்பயிற்சியில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது.?

நான் சாஃப்ட்வேர் துறையில் பல வருடம் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது எனக்கு சில நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது. அப்படியே விட்டு விட்டால் நடக்கவே முடியாமல் போய் விடும் என்பதால் யோகா, உடற்பயிற்சி மேற்கொண்டேன். ஆனால், எந்த பலனும் இல்லாமல் போனது.

அப்போது கர்லாக்கட்டை பயிற்சி பற்றி கேள்விப்பட்டு அதை செய்ய தொடங்கினேன். சில மாதங்களிலேயே எல்லா உபாதைகளும் சரியாக தொடங்கின. எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது. அப்போது தான், என்னைப்போல நோயினால் கஷ்டப்படுபவர்களுக்கும் இதை நாம் ஏன் சொல்லி தரக்கூடாது என என் மனதிற்குள் தோன்றியது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்துகொண்டு எவ்வாறு பயிற்சி அளிக்கிறீர்கள்.?

அமீரகத்தில் இருந்து கொண்டு பிறருக்கு பயிற்சி அளிப்பது என்பது முதலில் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. எனவே இந்த கலையை கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சி அளிக்க நான் தேர்ந்தெடுத்த வழிதான் ஆன்லைன் பயிற்சிமையம். கடந்த ஒரு வருடத்தில் ஆன்லைன் மூலம் 500க்கும் மேற்பட்டோர்க்கு மெய்படம், கர்லாக்கட்டை பயிற்சி அளித்துள்ளேன். அதில் 200க்கும் மேற்பட்டோர் தங்களின் நாள் பட்ட நோயிற்கு தீர்வு கண்டு இப்போது ஆரோக்கியமான வாழ்வை வாழ்கின்றனர். நோய் என்பது நம்மில் எழும் பயம் மற்றும் பெரும் அதிர்ச்சியால் ஏற்படுவதுதான். உணவு மற்றும் சுற்று சூழலால் வருவது இரண்டாம் பட்சமே. இந்த கரலாக்கட்டை பயிற்சி அதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த உடற்பயிற்சி முறை பற்றி தெரியாதவர்களுக்கு உங்கள் பதில் என்ன.?

பண்டைய காலத்தில் சத்திரியர்கள் போருக்கு செல்வதற்கு முன் தங்கள் உடல், மனம், புத்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி முறையை பின்பற்றியுள்ளனர். இந்த உடற்பயிற்சியில் பயன்படுத்தப்படும் உபகரணமான கரலாக்கட்டை மருத்துவகுணம் பொருந்திய மரத்தினால் செய்யப்படுகிறது. இதில் தொப்பைக்கரலை, புஜக்கரலை, புடிக்கரலை, கைக்கரலை மற்றும் குஸ்திக்கரலை என வகைகளும் உண்டு. கரலாக்கட்டை பயிற்சி பற்றி பல கோவில் கல்வெட்டுகளிலும், சிற்பங்களிலும் நம் முன்னோர்களும் கூட குறிப்பிட்டுள்ளனர்.

கரலாக்கட்டை உடற்பயிற்சியினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.?

இந்த உடற்பயிற்சி நம் உடல், மனம், புத்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட நோய்களை இதன் மூலம் குணப்படுத்தலாம். இந்த பயிற்சியில் 1500 மெய்ப்பாடம் சுற்றுகளும், 64 கரலாக்கட்டை சுற்றுகளும் உள்ளது. நம், இடது மற்றும் வலது மூளையை பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு சுற்றுகளும் இருக்கும். ஒவ்வொரு சுற்றையும் 108 தடவை செய்யும் போது நமது மூளை, நரம்பு மண்டலம், தசைகள் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் இதனால் வலுப்பெறும்.

கரலாக்கட்டை உடற்பயிற்சி முறையில் உங்கள் இலக்கு என்ன.?

இந்தியாவில் கரலாக்கட்டை பயிற்சியாளர் சான்றிதழ் பெற்ற பெண்கள் மிகவும் குறைவு என்பதால், நிறைய பெண்கள் பயிற்சி பெற்று அதனை மற்றவருக்கும் கற்பிப்பதன் மூலம் நம் பாரம்பரிய உடற்பயிற்சி முறையை இளைய சமுதாயத்தினருக்கும் கொண்டு சேர்ப்பதும், நோயற்ற சமுதாயம் காண்பதுமே எனது லட்சியம்.

இதில் கிடைக்கும் திருப்தி வேறு எந்த வேலையிலும் எனக்கு கிடைக்கவில்லை, எனது குரு கலைமாமணி திரு.ஜோதி செந்தில் கண்ணன் (புதுச்சேரி), அவர்களின் ஆசியுடன் இதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். நம் முன்னோர்கள் நமக்காக பல கலைகளை விட்டுச் சென்றுள்ளனர். நம் முன்னோர்கள் இதை செய்ததால் இந்த கலை நம் மரபிலேயே உள்ள நிலையில், ஏன் வெளியே தேட வேண்டும். எல்லோரும் முறையாக கற்றுக் கொண்டு பயன் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இறுதியாக கரலாக்கட்டை உடற்பயிற்சி முறையில் அவர் புரிந்த சாதனைகளுக்கு பாராட்டுகளையும், அவர் எண்ணிய இலக்கை அடைந்து அவரின் லட்சியமும், நோக்கமும் நிறைவேற எங்கள் சார்பாக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.