ADVERTISEMENT

UAE: வாகன பார்க்கிங் கட்டணம், டோல் கேட் செயல்படும் நேரங்களில் மாற்றம்.. அறிவிப்பை வெளியிட்டுள்ள அபுதாபி..!!

Published: 23 Mar 2023, 12:35 PM |
Updated: 23 Mar 2023, 12:49 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமானது (ITC) ரமலான் மாதத்தில் கட்டண வாகன நிறுத்துமிடங்கள், டோல் கேட் நேரம் மற்றும் பொது பேருந்து சேவைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. திங்கள் முதல் சனி வரையிலான இந்த புதிய நேரப்படி, காலை 8:00 மணி முதல் நள்ளிரவு வரை ரமலானில் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும் என்றும், மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும்  Darb டோல் கேட் அமைப்பானது ரமலான் காலத்தின் போது போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களான காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டோல் கட்டணம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பயன்படுத்தப்படும், மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து

அபுதாபி சிட்டி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரமலான் மாதத்தில் பொதுப் பேருந்து சேவைகள் வாரம் முழுவதும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவைகள் அபுதாபி சிட்டியில் அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி, அதிகாலை 1:00 மணி வரை நீடிக்கும் என்றும் அபுதாபியின் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, சேவைகள் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சில சேவைகளின் இயக்க நேரங்களில் சிறிது மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அல் அய்ன் சிட்டியைப் பொறுத்தவரை, ரமலான் மாதத்தில் பொது பேருந்து சேவைகள் காலை 7:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இந்த சேவைகள் காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை வழங்கப்படும் எனவும், சில சேவைகள் நள்ளிரவு வரை செயல்படும் எனவும். புறநகர் பொதுப் பேருந்து சேவைகளில் பெரும்பாலானவை மாறாமல் இருக்கும் என்றும், அல் அய்ன் சிட்டியில் ஒரு சில சேவைகளின் இயக்க நேரங்களில் சிறிது மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அல் தஃப்ராவில் உள்ள பொதுப் பேருந்து சேவை தற்போதைய சேவை நேரத்தில் குறைந்த மாற்றங்களுடன் செயல்படும். இஃப்தார் நேரத்தில் பொது பேருந்து சேவை இயங்காது என கூறப்பட்டுள்ளது. அபுதாபி எக்ஸ்பிரஸ் சேவைகளைப் பொறுத்தவரை, இந்த சேவை வார நாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 6:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் ஆன்-டிமாண்ட் பேருந்து “Abudhabi Link” சேவை வாரம் முழுவதும் காலை 06:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்

அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி மற்றும் அல் அய்ன் சிட்டி முனிசிபாலிட்டியில் உள்ள வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள் ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கும் என்று ITC தெரிவித்துள்ளது.