ADVERTISEMENT

UAE: நபரின் மீது டிரக் மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணம்.. தப்பிச்சென்ற டிரைவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!

Published: 20 Mar 2023, 11:01 AM |
Updated: 20 Mar 2023, 11:01 AM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் ஒரு நபரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிரக் டிரைவர் விபத்தை ஏற்படுத்தியவுடன் நிற்காமல் தப்பித்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் வெறும் 4 மணி நேரத்திற்குள் அந்த டிரைவரை கண்டறிந்து அதிரடியாக கைது செய்துள்ளனர். ராஸ் அல் கைமாவில் நடந்த இந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான நபர் மரணமடைந்தது சோகத்திற்குரிய விஷயமாகும்.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமா காவல்துறையின் ஜெனரல் கமாண்ட் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், சனிக்கிழமை காலை ஒரு அரேபிய நபரின் மீது மோதிய டிரக் டிரைவர் விபத்தை ஏற்படுத்தியவுடன் நிற்காமல் மற்றொரு எமிரேட்டிற்கு தப்பிச்சென்றதாக கூறியுள்ளார்.

ராஸ் அல் கைமா காவல்துறை போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் மேஜர் அகமது அல்-சாம் அல் நக்பி தெரிவிக்கையில் இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலை 3:55 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் ஒரு நபர் லாரியில் மோதியதாகவும் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறை ரோந்து மற்றும் தேசிய ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். விபத்தில் இறந்தவர் தனது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கியிருக்கின்றார். டிரக் டிரைவர் ஒழுங்காக கவனம் செலுத்தாததால், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியிருக்கிறார். இதனால் விபத்துக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உடனடியாக ஒரு போக்குவரத்து கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டு அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் டிரக் குறித்த விபரங்கள் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து ஷார்ஜாவில் உள்ள ஒரு பகுதியில் இந்த டிரக்கின் இருப்பிடம் கண்டறியப்பட்டு குற்றவாளியை கைது செய்ய ஷார்ஜா காவல்துறையின் ஜெனரல் கமாண்ட் உடன் RAK காவல்துறை ஒருங்கிணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் கைது செய்யப்பட்ட டிரக் டிரைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.