ADVERTISEMENT

உணவுத் தேவைகளில் 50 சதவீதத்தை இந்த ஆண்டிற்குள் அமீரகத்திலேயே உற்பத்தி செய்ய திட்டம்.. 2030 ல் விவசாயத்தில் தன்னிறைவை அடைய அரசு இலக்கு..

Published: 26 Mar 2023, 1:38 PM |
Updated: 26 Mar 2023, 5:49 PM |
Posted By: admin

விவசாயம் சார்ந்த உணவு பொருட்களுக்கு பெரும்பாலும் பிற நாடுகளையே சார்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம் தற்போது சில வருடங்களாக, அன்றாடம் தேவைப்படும் இறைச்சி, கோழி, முட்டை, பச்சை இலைகள், தக்காளி போன்ற அடிப்படை உணவு பொருட்களை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ADVERTISEMENT

நாட்டிற்கு தேவையான சில அடிப்படை உணவுத் தேவைகளில் 50 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் விவசாய பண்ணைகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறுவதையும், வரக்கூடிய 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை 100 சதவீதமாக உயர்த்துவதையும் அமீரக அரசு நோக்கமாகக் கொண்டு அதற்கேற்ப பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதாவது, இந்த முயற்சியின் மூலம் சில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சில உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு தேவையான இறைச்சி, கோழி, முட்டை, பேரீச்சம்பழம், பச்சை இலைகள், தக்காளி போன்ற 10 அடிப்படை உணவுகளில் 50 சதவீதத்தை உள்ளூர் பண்ணைகளிலிருந்து பெறவும், அடுத்தபடியாக, 2025 ம் ஆண்டுக்குள் இதனை 70 சதவீதமாகவும், இறுதியில் 2030ல் 100 சதவீதமாகவும் உயர்த்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உணவும் தேசிய பாதுகாப்பும்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பை ஒரு தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாகவும் கருதுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக்கான 1வது தேசிய உரையாடலின் போது அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் (MoCCE) மரியம் பின்த் முகமது அல்மெய்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய இரண்டு பெரிய நெருக்கடிகளை உலக நாடுகளுடன் சேர்ந்து அமீரகமும் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது கொரோனா பரவல் மற்றும் நாடுகளுக்கிடையேயான மோதல் போன்றவற்றினால் உலகளாவிய உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அமீரக அரசு முக்கிய மூலோபாய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஷார்ஜாவின் மலிஹாவில் உள்ள ஒரு பெரிய பண்ணையில் வளர்க்கப்படும் கோதுமையின் முதல் அறுவடை மூலம் உணவை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஐக்கிய அரபு அமீரகம் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதல் சாகுபடியில் சுமார் 15,200 டன் கோதுமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், உள்ளூர் விவசாயிகளுக்கு எப்படி உற்பத்தி செய்வது மற்றும் எப்படி விற்பனை செய்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் பரவல் உண்மையில் விவசாய தன்னிறைவுக்கு தயாராக இருக்க நமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக அமீரகத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் நாட்டிற்கு தேவையான அடிப்படை உணவு பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவை அடைய உள்ளூர் விவசாயிகள் போட்டியிட வேண்டும் என்றும், இதனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான உறவு நிலயானதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏற்கனவே, உள்ளூர் விவசாயத்தின் மூலம் தன்னிறைவை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய செங்குத்து பண்ணை கடந்த ஆண்டு துபாயில் திறக்கப்பட்டது. அதுபோல உட்புற விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உலகின் மிகப்பெரிய உட்புற செங்குத்து பண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அபுதாபியில் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.