அமீரக செய்திகள்

UAE: உதவி பொருட்களை பேக் செய்த அரச குடும்பத்தின் பேரக்குழந்தைகள்.. தன்னார்வலர்களுக்கு ஷாக் கொடுத்த அமீரக ஜனாதிபதி.!

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குடியிருப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களை பேக் செய்து கொண்டிருந்த தன்னார்வலர்களை, அமீரகத்தின் ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நேரில் சந்தித்துப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அபுதாபியில் உள்ள முபதாலா அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை பேக் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அமீரக ஜனாதிபதியும் அவரது பேரக்குழந்தைகள் உட்பட அரச குடும்ப உறுப்பினர்களும் அங்கே வருகை தந்துள்ளனர். இந்த புகைப்படங்களை எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் (ERC) தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவெனில், கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க போராடும் துருக்கியர்கள் மற்றும் சிரியர்களுக்கு உணவு உள்ளிட்ட பிற அத்தியாவசியமான பொருள்களை பேக் செய்வதில் ஜனாதிபதியின் இளம் அரச குடும்பமான அவரது பேரப்பிள்ளைகள் உட்பட சிறு குழந்தைகள் பலரும் பங்கேற்று தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட ‘Bridges of Good’ பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்தும் ERC அதிகாரிகள் ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளனர். ‘Bridges of Good’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை அமீரகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பேக் செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வைகள், பெட்ஷீட்கள், டீ தூள், டூத் பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பு, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பொருட்களை குடியிருப்பாளர்களிடம் சேகரித்து தன்னார்வலர்கள் பேக் செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற பொருட்களை நன்கொடையாக வழங்க விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் ERC இணையதளம் வழியாக வழங்கலாம்.

ஏற்கனவே, பிப்ரவரி 15 அன்று, மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் உத்தரவின் பேரில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு முதற்கட்டமாக தலா 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமீரகத்தின் சார்பாக இரண்டு கள மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டன. மேலும், மார்ச் 2 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகம் 134 சரக்கு விமானங்களை சிரியாவுக்கு அனுப்பி சுமார் 4,413 டன் எடையுள்ள பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி, துருக்கிக்கும் டன் கணக்கில் உதவிகளை அனுப்பியுள்ளது.

இதற்கு முன்னர், அபுதாபிக்கு உட்பட்ட அல் தஃப்ரா பிராந்தியத்தின் ஆட்சியாளரின் பிரதிநிதியும், எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட்டின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் குழந்தைகளைச் சந்தித்து பேசிய புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. அதில் சுமார் 40 மணி நேரம் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட 9 வயது குழந்தையும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!