அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரங்களை அறிவித்த அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களின் வேலை நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டு குறுகிய வேலை நேரங்களை பின்பற்றுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வரிசையில் இந்த வருட ரமலான் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தனியார் துறை நிறுவனங்கள் செல்படும் நேரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் மனித வள மற்றும் எமிராடிசேஷன் அமைச்சகம் இந்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக அரசுத்துறை நிறுவனங்களுக்கு குறுகிய வேலை நேரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான அறிவிப்பில், ரமலான் மாதத்தில் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரங்களில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுவாக, தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்வார்கள். இது ரமலான் மாதத்தில் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 36 மணிநேரமாக குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அமைச்சகம் கூறியதாவது “தங்கள் பணியின் தேவைகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப, நிறுவனங்கள் ரமலான் காலங்களில் தினசரி வேலை நேர வரம்புகளுக்குள் நெகிழ்வான அல்லது தொலைதூர வேலை முறைகளைப் பயன்படுத்தலாம். அமைச்சகம் குறிப்பிட்டுள்ள வேலை நேரங்களை விட அதிக நேரம் வேலை செய்பவர்கள் அதனை ஓவர்டைமாக கருதலாம் அதற்காக தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

முன்னதாக,அரசின் மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம் (Federal Authority for Government Human Resources – FAHR) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அமைச்சகங்கள் மற்றும் ஃபெடரல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை 9:00 முதல் 14:30 வரையிலும், வெள்ளிக்கிழமை 9:00 முதல் 12:00 வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!