அமீரக செய்திகள்

துபாயில் முதன் முதலாக ‘சிட்டி செக்-இன்’ வசதியை அறிமுகம் செய்துள்ள எமிரேட்ஸ்..!!-இனி பயணிகள் செக்-இன் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை…

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘சிட்டி செக்-இன்’ சேவையை பயணிகளின் வசதிக்காக துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரின் (Dubai International Financial Centre – DIFC) ICD புரூக்ஃபீல்ட் மையத்தில் அறிமுகம் செய்துள்ளது. எமிரேட்ஸ் அறிமுகம் செய்த உலகின் முதல் செக்-இன் ரோபோவான சாராவின் உதவியுடன் இந்த சிட்டி செக்-இன் சேவை பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

துபாய் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எமிரேட்ஸின் இந்த புதிய சிட்டி செக்-இன் மற்றும் டிராவல் மையத்தில், வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, விமானங்களுக்கான செக்-இன் வசதி, லக்கேஜ்களை முன்கூட்டியே டிராப் செய்யும் வசதி, பயணத் தேவைகளுக்கு ஷாப்பிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் நேரம் பெருமளவில் மிச்சப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள சிட்டி செக்-இன் மையத்தில், பயணிகள் தங்களின் பயண நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவும், விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் வரையிலும் இங்கு செக்-இன் செய்து கொள்ள முடியும். மேலும் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை எந்த நேரத்திலும் இந்த வசதியை அணுகலாம் எனவும் எமிரேட்ஸ் கூறியுள்ளது.

மேலும் இங்கு பயணிகள் சுய-செக்-இன் கியோஸ்க்குகளிலும், எமிரேட்ஸ் ஏஜெண்டுகளுடன் பிரத்யேக டெஸ்க்களிலும் அல்லது உலகின் முதல் செக்-இன் ரோபோ உதவியாளரான சாராவின் உதவியுடன் செக்-இன் செய்யலாம். குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எமிரேட்ஸ் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, காண்போரின் கண்ணைக் கவரும் வகையில் 2.5 மீட்டர் LCD திரையுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ சாராவுடன் பயணிகள் தொடர்பு கொள்வது இதுவே முதல் முறையாகும்.

எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ரோபோ சாரா, பயணிகளின் முகங்களை ஸ்கேன் செய்து, அவர்களின் பயண ஆவணங்களை சரிபார்த்து செக்-இன் செய்வதுடன் போர்டிங் பாஸ்களை அச்சிட்டு பயணிகளுக்கு உதவி செய்யும். அதுபோல, ரோபோவின் அடுத்த மறுவடிவமைப்பில் பயணிகளின் சுமைகளை கொண்டு செல்லக்கூடிய வகையில் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், விமான நிலையத்தில் செல்லுபடியாகும் போர்டிங் பாஸ்களை வைத்திருக்கும் எமிரேட்ஸ் பயணிகள், அந்த இடத்தைக் கண்டறிய அல்லது தங்கள் விமானத்திற்கு முன் ஓய்வெடுக்க விரும்புபவர்கள், உலகப் புகழ்பெற்ற ICD புரூக்ஃபீல்ட் பிளேஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை முறை வசதிகளுக்கான பாராட்டு அணுகலையும் (complimentary access), பல உணவகங்கள், ஜிம்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் போன்றவற்றையும் அனுபவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமிரேட்ஸின் COO அடெல் அல் ரெதா என்பவர் கூறுகையில், முதல் முறையாக துபாயில் எமிரேட்ஸ் சிட்டி செக்-இன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும். இதன் வெற்றி மற்றும் தேவையை நாங்கள் அளவிட்ட பிறகு, அதை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியுமா என்பதை முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!