அமீரக செய்திகள்

துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ‘கோல்டன் சான்ஸ்’-ஐ அறிமுகப்படுத்திய RTA.. லக்கு இருந்தால் இனி நேரடி லைசென்ஸ்..!!

விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கும், விலையுயர்ந்த கார்களுக்கும் பெயர் பெற்ற துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஏனெனில் அமீரகத்தில் உள்ள அபுதாபி, ஷார்ஜா போன்ற மற்ற எமிரேட்டுகளை விடவும் துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான வழிமுறைகளும், ரோடு டெஸ்ட் எனப்படும் இறுதி தேர்வுக்கு முந்தைய விதிகளும் ரொம்பவே கடினம். ஆனால், இனி அந்த கஷ்டம் துபாயில் லைசென்ஸ் எடுக்க நினைப்பவர்களுக்கு இருக்கப்போவதில்லை.

ஆம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இப்போது, ரோடு டெஸ்ட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படாத நாடுகளில் இருந்து, ஏற்கனவே செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு, ஓட்டுநர் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு நேரடியாக ரோடு டெஸ்ட் எனும் இறுதி சோதனைகளுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.

வாகனம் நன்கு ஓட்ட தெரிந்து, தங்களின் சொந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் இந்த ‘கோல்டன் சான்ஸ்’ எனப்படும் புதிய அம்சம், இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக RTA கால் சென்டர் நிர்வாகி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கோல்டன் சான்ஸ் முறையானது துபாயில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அபுதாபியில் பல காலங்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RTA வின் இந்த புதிய கோல்டன் சான்ஸ் முன்முயற்சியானது, ரோடு டெஸ்ட் இல்லாமலேயே தங்கள் நாட்டு டிரைவிங் லைசென்ஸை UAE லைசென்ஸாக மாற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள 43 நாடுகளை தவிர்த்து, மற்ற நாட்டு குடியிருப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்றி, அமீரகத்தின் டிரைவிங் லைசென்ஸைப் பெறுவதற்கு நேரடியாக ஒருமுறை ஓட்டுநர் தேர்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

அதன்படி, ரோடு டெஸ்ட் இல்லாமல் நேரடியாகவே டிரைவிங் லைசென்ஸை பெற அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இல்லாத இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள், துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க இந்த கோல்டன் சான்ஸ் முறையை ஒருமுறை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கூடுதலாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

கோல்டன் சான்ஸ் முயற்சிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கோல்டன் சான்ஸ் முன்முயற்சிக்கு விண்ணப்பிக்க, உங்கள் அருகிலுள்ள ஓட்டுநர் மையத்தை அணுகலாம்.

விண்ணப்பிப்பதற்கான செலவுகள் என்ன?

இது ஓட்டுநர் மையத்தை பொறுத்து மாறுபடும். இருப்பினும், இதற்கான செலவுகள் கோப்பைத் (file) திறப்பதற்கான கட்டணம், சோதனைகள், உரிமம் வழங்குதல் போன்ற அனைத்திற்கும் சேர்த்து தோராயமாக சுமார் 2,200 திர்ஹம்ஸ்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி தேர்வுக்கு முன் பயிற்சி எடுக்க வேண்டுமா?

இல்லை, விண்ணப்பதாரர் எந்த முன் பயிற்சியும் எடுக்கத் தேவையில்லை. இருப்பினும், கூடுதல் கட்டணத்துடன் பயிற்சி எடுக்க விருப்பமுள்ளவர்கள் அதைத் தேர்வு செய்யலாம்.

தேர்வில் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?

விண்ணப்பதாரர் கோல்டன் சான்ஸ் நேரடி தேர்வில் தோல்வியுற்றால், அவர்கள் வழக்கமான பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!