வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு மூன்று மாத ‘தற்காலிக வேலை விசா’-ஐ அறிமுகம் செய்த சவூதி அரேபியா..!! விதிமுறைகளை வெளியிட்ட அரசு..!!

சவூதி அரேபியாவில் பணிபுரிவதற்காக மூன்று மாத தற்காலிக வேலை விசாவை (Temporary Work Visa) சவுதி அரேபியா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த விசாவானது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் உடனடியாக வழங்கப்படும் என்றும் சவுதி அரேபியாவின் மனித வள அமைச்சகத்தின் தொழிலாளர் துறையில் பல்வேறு சேவைகளை வழங்கும் தொழிலாளர் போர்டல் அமைப்பான கிவா (Qiwa) தெரிவித்துள்ளது.

கிவா தளத்தின்படி, இந்த புதிய தற்காலிக வேலை விசாவை நிறுவனங்கள் வழங்குவதற்கு அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாவில் வரும் நபர் நாட்டிற்குள் நுழைந்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரியலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் தற்காலிக வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதி மற்றும் குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமின்றி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணிபுரிய அனுமதிக்கும் இந்த தற்காலிக வேலை விசாவை, மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம் எனவும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

தற்காலிக வேலை விசா சேவைக்கான விதிமுறைகளின்படி, இந்த விசாவிற்கான கோரிக்கையை சவுதியில் இயங்கிவரும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது கிவா வணிகத்தில் ஆணையர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வணிகப் பதிவு (Commercial Registration) தேவையில்லாத செயல்பாடுகளைத் தவிர மற்ற செயல்பாடுகளை கொண்ட நிறுவனங்கள் செயலில் இருக்க வேண்டும் மற்றும் சரியான வணிகப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும், தேசிய ஒருங்கிணைந்த எண்ணின் (National Unified Number) கீழ் உள்ள நிறுவனங்களுக்கு காலாவதியான பணி அனுமதி எதுவும் இருக்கக்கூடாது எனவும், மேலும் அப்ஷர் (Absher) கணக்கில் நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைந்த எண்ணில் போதுமான வரவு வைத்திருக்க வேண்டும் எனவும் தற்காலிக வேலை விசாவிற்கான விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் வழங்கப்படும் இந்த விசாவானது ஒரு வருடத்திற்குள் செல்லுபடியாகும் என்றும், அப்ஷரில் உள்ள நிறுவனத்தின் ஒருங்கிணைந்த எண்ணில் போதுமான இருப்பு இல்லாமல் இருந்தால் தற்காலிக விசாவிற்கான கோரிக்கை நிராகரிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசாவை ரத்து செய்வதற்கான கோரிக்கையை வணிக உரிமையாளர் அல்லது கமிஷனர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கிவா தளத்தில் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!