ADVERTISEMENT

துபாய்: தேரா தீ விபத்தில் பிறரை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டு தமிழர்கள்.. அடையாளம் கண்டறிந்த உறவினர்கள்..!!

Published: 16 Apr 2023, 2:17 PM |
Updated: 17 Apr 2023, 3:25 PM |
Posted By: admin

துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களில் நான்கு இந்தியர்களை துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அடையாளம் கண்டுள்ளது. துபாய் சிவில் பாதுகாப்பு துறை கூறுகையில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் முறையான பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்காததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உயிரிழந்த நான்கு இந்தியர்களில் இருவர் கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் என்றும் மற்ற  இருவரும் தீப்பிடித்த கட்டிடத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சார்ந்த நபர்கள் என்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இந்தியர்கள் ரிஜேஷ் கலங்கடன் (வயது 38), அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (வயது 32), முகம்மது ரஃபீக் (வயது 49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (வயது 43) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் தெரிவிக்கையில் “சமூக சேவகர் நசீர் வடனப்பள்ளி மூலம் அவர்களின் பாஸ்போர்ட் நகல்களை நாங்கள் பெற்றுள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதரவு அளித்த சமூக சேவையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உயிரிழந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பும் நடைமுறைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் ஒருங்கிணைத்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், உயிரிழந்த ரஃபீக்கின் மூத்த சகோதரரான பாஷா என்பவர் கூறுகையில், தனது சகோதரரும் உயிரிழந்த மற்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் காதரும் கட்டிடத்தில் இருந்தவர்களை காப்பாற்ற உதவியதில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ரஃபீக் வாட்ச்மேன்  ஆகவும், அப்துல் காதர் பெயிண்டர் மற்றும் கார்பென்டராகவும் அந்த கட்டிடத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் பாஷா மேலும் கூறுகையில், “அதிக சப்தம் கேட்டு உடனடியாக அந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தபோது 4வது மாடியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது, எனினும் என்னால் அந்த சமயத்தில் உதவ முடியவில்லை. என்னால் வெளியில் இருந்து மட்டுமே பார்க்க முடிந்தது” என்று கூறியிருக்கிறார். 

ADVERTISEMENT

கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் அவர்கள் இருவரையும் வெளியே வரச் சொன்னதாகவும், ஆனால் அவர்கள் கட்டிடத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்ற விரும்பியதால் கட்டிடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர் எனவும் பாகிஸ்தானிய நபர் ஒருவர் தெரிவித்ததாக பாஷா தெரிவித்துள்ளார்.

பின்னர் பிற்பகல் 3 மணியளவில் தனது சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்ததும் தானும் மருத்துவமனைக்கு சென்றதாகவும், மருத்துவமனை சென்றடைந்தபோது தனது சகோதரர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஷாவின் கூற்றுப்படி, ரஃபீக் துபாயில் 26 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் பாஷா தெரிவித்துள்ளார். இவருடன் சேர்ந்து உயிரிழந்த அப்துல் காதர் என்பவர் மூன்று வருடங்களாக இந்த கட்டிடத்தில் பணிபுரிந்து வந்துள்ளார், மேலும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒன்று மூன்று மாத கைக்குழந்தை என்றும், இதுவரை நேரில் சென்று பார்க்காத தனது குழந்தையை பார்க்க ரமலான் முடிந்த பின்பு ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.