அமீரக செய்திகள்

துபாய்: 269 புதிய ‘டெஸ்லா மாடல் 3’ கார்களை டாக்ஸியாக அறிமுகப்படுத்திய டாக்ஸி நிறுவனம்..!!

உலகளவில் ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த காராக அறியப்படும் டெஸ்லா கார்களை அபுதாபி மற்றும் ஷார்ஜா, டாக்ஸி வாகனங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, தற்போது துபாயிலும் டெஸ்லா காரின் புதிய மாடலான ‘Model 3’ கார்கள் டாக்ஸி வாகனமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

துபாயை மையமாக கொண்டு அமீரகம் முழுவதும் 6,000 டாக்ஸி கார்களுடன் இயங்கி வரும் அரேபியா டாக்சி நிறுவனம், கார்பன் உமிழ்வு இல்லாத எதிர்காலத்தை நோக்கிய தனது பயணத்தின் முயற்சிக்கேற்ப, எலெக்ட்ரிக் வாகனமான 269 புதிய டெஸ்லா கார்களை தங்களின் டாக்ஸி சேவையில் அறிமுகப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளது.

இது குறித்து அரேபியா டாக்ஸியின் உரிமையாளரான எகனாமிக் குரூப் ஹோல்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2027 ஆம் ஆண்டிற்குள் டாக்ஸி வாகனங்களை கார்பன் உமிழ்வு இல்லாததாக மாற்றுவதற்கான அதன் ஐந்தாண்டு இலக்கின் ஒரு பகுதியாக, புதிய டெஸ்லா 3 மாடல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. .

மேலும், மீதமுள்ள வாகனங்களை முழுவதுமாக மின்சார கார்களாக மாற்றுவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தில் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், மேலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாகவும் எகனாமிக் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷேக் மஜித் பின் ஹமத் அல் காசிமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், “டெஸ்லா மற்றும் பல எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்களுடன் அரேபியா டாக்ஸியின் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், அதன் வாடிக்கையாளர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து விருப்பங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எலெக்ட்ரிக் டாக்ஸியின் பயன்பாடு, பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறையை நிலையானதாக மாற்றுவதை ஊக்குவிப்பதிலும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் முழு பிராந்தியத்திலும் வணிக நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதிலும் இந்த நடவடிக்கை ஒரு முன்னணி பங்கை வகிக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!