அமீரக செய்திகள்

UAE குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் நான்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்.. எப்படினு தெரியுமா ..?

ரமலான் மாதம் முடிய இன்னும் ஒன்பது நாட்களே இருப்பதால் ஈத் அல் பித்ரின் நீண்ட வார இறுதி விடுமுறையை கொண்டாட அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த நீண்ட விடுமுறை நாட்களில் அமீரகத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கு சென்று சுற்றிப்பார்க்கவும், அங்கேயே விடுமுறை நாட்களை கழிக்கவும் விரும்பும் குடியிருப்பாளர்களும் நம்மில் அதிகம்.

அவ்வாறு செல்ல திட்டமிடுபவர்களுக்கு முதலில் தேவைப்படுவது அந்த நாட்டிற்கு பயணிக்க அனுமதிக்கும் சுற்றுலா விசா. அதேசமயம் குறுகிய கால விடுமுறையாக ஒரு சில நாடுகளுக்கு செல்ல விசா அனுமதிக்காக காத்திருக்கும் நேரமும் அதிகம். ஆனால், நீங்கள் செல்லுபடியாகும் UAE ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்கும் குடியிருப்பாளராக இருந்தால், குறுகிய விமான தூரத்தில் உள்ள நான்கு பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு விசா அனுமதி இல்லாமலேயே சென்று சுற்றிப்பார்க்க முடியும்.

ஏனென்றால் அஜர்பைஜான், ஜார்ஜியா, மாலத்தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய இந்த நான்கு பிரபலமான சுற்றுலாத்தலங்களும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு வருகையின் போது வழங்கப்படும் விசாவை (visa on arrival) வழங்குகிறது. அது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காண்போம்.

1. அஜர்பைஜான்:

அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகியவை அமீரக குடியிருப்பாளர்களுக்கான விரைவான சுற்றுலா தலங்களாகும். மேலும், அமீரகத்தைத் தளமாகக் கொண்ட விமான நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு பல பேக்கேஜ்களை வழங்குகிறது. அத்துடன் கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்த நாடுகளுக்கான பேக்கேஜ்கள் குடியிருப்பாளர்களிடையே மிக பிரபலமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அஜர்பைஜானுக்கு e-விசா மூலம் செல்வதன் நன்மை என்னவென்றால், நீங்கள் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் குறைவாக இருக்கும். அதுவே வருகையின் போது விசாவைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் மெஷின்களில் உங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, உங்கள் பயண விவரங்களை உள்ளிட்ட பின்னரே வருகையின் போது விசாவைப் பெற முடியும்.

விசா தேவைகள்:

  • குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
  • அதுபோல, குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் UAE குடியிருப்பு விசா வைத்திருக்க வேண்டும்.

2. ஜார்ஜியா:

ஜார்ஜியாவில் பயணிகளுக்கு வருகையின்போது வழங்கப்படும் விசா மட்டுமே வழங்கப்படுகிறது, இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். விசா பெறுவதற்கு நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

— குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
அதுபோல, குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் UAE குடியிருப்பு விசா வைத்திருக்க வேண்டும்.

— அத்துடன் பயணிகள் தங்களுடைய தங்குமிடம், பயணம் மற்றும் உடல்நலக் காப்பீட்டு விவரங்களை வழங்க வேண்டும். மேலும் நீங்கள் தங்கியிருக்கும் காலத்திற்கு போதுமான நிதி உள்ளதா என்பதை நிரூபிக்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். எனவே, சமீபத்திய வங்கி அறிக்கை அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் நீங்கள் தங்கியிருக்கும் காலத்திற்கு போதுமான பணம் உங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்கலாம்.

— குறிப்பாக, UAE-ஐ தளமாகக் கொண்ட விமான நிறுவனத்தில் நீங்கள் விமானத்தை முன்பதிவு செய்தால், பயணக் காப்பீட்டுச் செலவும் ஒட்டுமொத்த செலவில் சேர்க்கப்படும்.

3. மாலத்தீவுகள்:

மாலத்தீவுக்கு வந்தவுடன் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்கப்படுகிறது. அதுபோல, சுற்றுலாப் பயணியாக மாலத்தீவுக்குச் செல்லும் வெளிநாட்டவருக்கு விசாவிற்கு முன் அனுமதி தேவையில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விசாவில் 30 நாட்கள் வரை நாட்டில் தங்க அனுமதி உண்டு. இருப்பினும், மாலத்தீவு குடியேற்றத்தின்படி பின்வரும் அடிப்படை நுழைவுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:

— குறைந்தபட்சம் ஒரு மாத செல்லுபடியாகம் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணம் வைத்திருக்க வேண்டும்.

— திரும்புவதற்கான டிக்கெட்டுகள், உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவு விவரங்கள் மற்றும் உங்களிடம் போதுமான பணம் இருப்பதற்கான ஆதாரம் போன்றவை வேண்டும்.

— https://imuga.immigration.gov.mv/ என்ற லிங்க் மூலம் உங்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்பலாம். மாலத்தீவுக்கு வந்து சேரும்போதும் புறப்படும்போதும் விமான நேரத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் ‘Traveller Declaration’ படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

— குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசா அவசியம் வேண்டும்.

4. சீஷெல்ஸ்:

அனைத்து நாட்டவர்களும் விசா இல்லாமல் நாட்டிற்கு பயணம் செய்யலாம் என்று சீஷெல்ஸின் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. வருகையில் வழங்கப்படும் விசாவில் நீங்கள் 30 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம்.

சீஷெல்ஸுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை என்றாலும், பயணிகள் தங்கள் வசம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது சீஷெல்ஸ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற பயண ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று சீஷெல்ஸின் வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பயணிகளுக்கு வருகையின் போது ஒரு நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது:

— நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது வசிக்கும் நாட்டிற்குத் திரும்பும் வரை,தாங்கும் காலம் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

— திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட் அல்லது அடுத்த பயணத்திற்கான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

— உறுதிப்படுத்தப்பட்ட தங்குமிடம் மற்றும் தங்கும் காலத்திற்கான போதுமான நிதி குறைந்தபட்சம் US$150 (Dh550) உங்களிடம் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!