அமீரக செய்திகள்

கோடை விடுமுறையால் UAE-இந்தியா இடையே விறுவிறுவென உயரும் விமான கட்டணம்.. விலை மலிவாக இருக்கும் நாட்களை பகிர்ந்த பயண முகவர்கள்..!!

அமீரகத்தில் கோடைகால விடுமுறை இன்னும் சில வாரங்களில் வரவிருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா, இங்கிலாந்து, GCC மற்றும் எகிப்து போன்ற பிரபலமான இடங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் உச்சத்தை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பிப்ரவரி மற்றும் மார்ச் முதல் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விமான கட்டணங்கள் உயரத் தொடங்கியதாக பயணத்துறை நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கோடை விடுமுறையைக் கொண்டாட மக்கள் முன்கூட்டியே திட்டமிடுவதால் விடுமுறைக்கு முன்னதாகவே விமான டிக்கெட்டுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாத இறுதியில் கொண்டாடப்படும் ஈத் அல் அதா பண்டிகையின் பயண நாட்களில் பிரபலமான நகரங்களுக்கான விமான கட்டணம் இரட்டிப்பாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணிகளிடையே அதிகரித்து வரும் தேவையின் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் அமீரகத்திற்கான வழித்தடத்தில் சில விமானங்களை கூடுதலாக சேர்த்துள்ளது. மேலும் இது குறிப்பிட்ட நாட்களுக்கு தற்காலிக நிலைத்தன்மையை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

கோடை விடுமுறையில் அமீரகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதே பயணம் உச்சத்தை அடைய காரணம் என கூறப்படுகிறது. இந்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் பெரும்பாலும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மூடப்படும். இருப்பினும், ஈத் அல் அதா ஜூன் 28 அன்று வரக்கூடும் என்பதால், சில பள்ளிகள் ஒரு வாரம் அல்லது அதற்கு முன்னதாகவே விடுமுறை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கான விமானக் கட்டணங்களும் படிப்படியாக நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில், பல்வேறு விமான நிறுவனங்களில் விமானக் கட்டணம் தற்போதே 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, பட்ஜெட் விமானங்களில் இந்தியாவுக்கான விமானக் கட்டணம் வழக்கமாக சுமார் 1,200 திர்ஹம்கள் வரை செலவாகும், ஆனால் கோடையில் 1,800 முதல் 2,000 திர்ஹம்களை எட்டும் என்றும், அதேசமயம், முழு அளவிலான கேரியர்களின் விமானக் கட்டணம் 2,500 லிருந்து 3,300 திர்ஹம்களாக உயரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பயண முகவர்கள் தெரிவிக்கையில், விடுமுறையின் தொடக்கத்தில் ஈத் பண்டிகையினால் பள்ளிகள் மூடப்படும் நிலையில், இந்தியா செல்லும் வழித்தடங்களில் மக்கள் முன்கூட்டியே விரைவாக முன்பதிவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோடை விடுமுறையில் கூடுதல் இருக்கைகள் ஒதுக்கப்படாததும், இந்த விடுமுறை காலத்தை விமான நிறுவனங்கள் பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்துவதும் விமான டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பி வருவதற்கான வழித்தடங்களில் தற்போது டிக்கெட்டுகளின் விலை நிலையாக இருப்பதாகவும், ஜூலை இறுதிக்கு பிறகு அவை அதிகரிக்கத் தொடங்கும் என்றும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஜூலை 20ல் இருந்து ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன் அமீரகம் திரும்பும் பட்சத்தில் விமான டிக்கெட் விலை ஓரளவு மலிவானதாக இருக்கும் எனவும், அதுவே ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 5 ஆம் தேதி வரை அதிகளவிலான மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்புவதால் விமானக் கட்டணம் உச்சத்தில் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!