ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் நேற்று முன்தினம் ஜூன் 14, புதன்கிழமை அன்று, இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஷார்ஜா காவல்துறையினர் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா காவல்துறையினர் அளித்துள்ள தகவல்களின் படி, சரியாக இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தற்கொலை செய்து கொண்ட நபர் 35 வயதுடைய இந்திய நாட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா காவல்துறையின் மத்திய செயல்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததும், ரோந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக ஷார்ஜா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கடும் நிதிப் பிரச்சினை காரணமாக அந்த நபர் வேண்டுமென்றே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து பாலத்திலிருந்து குதித்துள்ளது தெரியவந்துள்ளது.