ADVERTISEMENT

ஷார்ஜாவில் இலவசமாக அல்லது வெறும் 20 திர்ஹம்ஸிற்குள் சுற்றிப்பார்க்க இயற்கையான ஐந்து இடங்கள்..!!

Published: 30 Jun 2023, 8:55 AM |
Updated: 30 Jun 2023, 9:07 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஈத் அல் அதா விடுமுறையை சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு (ECOTOURISM) செலவழிக்க விரும்பினால், ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்றில் மூழ்கிய கரடுமுரடான பள்ளத்தாக்குகளைக் கொண்ட ஷார்ஜாவை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ADVERTISEMENT

வரலாற்றில் மூழ்கிய பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் வழியாக நடைபயணம்,  பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பராமரிக்க மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை மறுவாழ்வு செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கை என சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு வெறும் 20 திர்ஹம் செலவில் அல்லது இலவசமாகச் சென்று வர பல விருப்பங்கள் ஷார்ஜாவில் உள்ளன.

ஷார்ஜாவின் அதிகாரப்பூர்வ சுற்றுலா தகவல் மையமான ‘Visit Sharjah’ இன் படி, ஷார்ஜாவில் சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கான ஐந்து இடங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் அனைத்தும் ஷார்ஜாவின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையத்தால் (Environment and Protected Areas Authority -EPAA) பாதுகாக்கப்பட்டு வரும் முக்கியமான இடங்களாகும்.

ADVERTISEMENT

1. ஷார்ஜா பாலைவனப் பூங்கா (Sharjah Desert Park):

இந்த பாலைவனப் பூங்காவில் சிறுத்தை, மான் போன்ற அரேபிய தீபகற்பத்தில் உள்ள பூர்வீக விலங்குகளைப் பார்த்து ரசிக்கலாம். மேலும், பறவைகளை வளர்க்கும் கூடத்தின் வழியாக நடந்து செல்வது, அழிந்துவரும் காட்டு விலங்கினங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இனப்பெருக்க மையத்திற்குச் செல்வது என பார்வையாளர்கள் சுற்றுச்சூழலை ஆராய்வதற்கு சிறந்த இடமாக இது இருக்கும்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, இங்கே வரும் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக செல்லப்பிராணி பூங்கா ஒன்றும் இந்த பார்க்கில் உள்ளது, அங்கு அவர்கள் குதிரைவண்டி சவாரி மற்றும் ஒட்டக சவாரி செய்து மகிழலாம்.

இடம்: பாலைவனப் பூங்காவானது, ஷார்ஜாவிலிருந்து கிழக்கே 30கிமீ தொலைவில் அல் தைத் நெடுஞ்சாலையில் (E88) இன்டர்சேஞ்ச் எண். 9க்கு முன் அமைந்துள்ளது.

கட்டணம்: பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணமாக 20 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இங்கு நுழைவு இலவசம்.

ஈத் விடுமுறையில் செயல்படும் நேரம்: வியாழன் முதல் ஞாயிறு வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழக்கமான நாட்களில் செயல்படும் நேரம்: திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 6.30 வரையிலும், சனி மற்றும் ஞாயிறு காலை 11 முதல் மாலை 6.30 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பூங்கா மூடப்படும்.

2. கோர் கல்பா சதுப்புநில மையம் (Khor Kalba Mangrove Center):

இந்த சதுப்புநில மையம், இயற்கையோடு இணைந்திருக்க விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாகும். இது கோர் கல்பா என குறிப்பிடப்படும் கல்பா பாதுகாப்புக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த மையத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான மாங்குரோவ் பகுதி வழியாக நீங்கள் நடந்து செல்லலாம்.

மேலும், அங்குள்ள பெரிய நேரான கொம்புகளுடைய ஆப்பரிக்க மான் வகையான ஓரிக்ஸ்கள், நண்டு வகையைச் சார்ந்த மீன்கள், ஆமைகள் மற்றும் பல்வேறு பறவைகள் போன்றவை பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும். அதுபோல, பருந்து ரசிகர்களுக்கென மாங்குரோவ் சென்டரில் இருந்து சிறிது தூரத்தில் Kalba Bird of Prey Centre உள்ளது.

அத்துடன் அல் ஹஃபியா பிக்னிக் பூங்காவிற்குச் சென்று நீங்கள் உணவுகளை ருசிக்கலாம். அதுமட்டுமின்றி, கல்பா கடற்கரையில் கயாக் செய்ய அல்லது தண்ணீருக்கு அருகில் கூடாரம் அமைத்து நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ் இருந்து வானிலையை ரசிக்கும் வாய்ப்பை இங்கு அனுபவிக்கலாம்.

இடம்: ரிசர்வ் ஷார்ஜாவின் கிழக்கு கடற்கரையில், ஷார்ஜா சிட்டி சென்டரில் இருந்து ஒன்றரை மணிநேர பயணத்தில் செல்லக் கூடிய தொலைவில் அமைந்துள்ளது.

கட்டணம்: பெரியவர்களுக்கு 15 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.

ஈத் விடுமுறையில் இயங்கும் நேரம்: வியாழன் முதல் ஞாயிறு வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களுக்கு திறந்திருக்கும். வெள்ளிக்கிழமையில் மட்டும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

வழக்கமான நாட்களில் செயல்படும் நேரம்: மற்ற நாட்களில் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். பொதுவாக திங்கட்கிழமைகளில் மையம் மூடப்படும்.

3. அல் குர்ம் நேச்சர் ரிசர்வ் (Al Gurm Nature Reserve):

இங்கு அரியவகை உயிரினங்களைக் காணும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏராளமான அரிய வகை பறவை இனங்கள், கடல் ஆமைகள் மற்றும் பாலூட்டிகள் உள்ள அல் குர்ம் நேச்சர் ரிசர்வில், அரேபிய காலர் கிங்ஃபிஷர்கள் சதுப்புநிலங்களுக்கு மேல் பறப்பதை நீங்கள் காணலாம்.

கூடுதலாக, உங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த விரும்பினால், சொகுசு கூடாரங்கள், கயாக்கிங் மற்றும் துடுப்பு பலகை சுற்றுப்பயணங்களையும் நீங்கள் இங்கே அனுபவித்து மகிழலாம்.

  • இடம்: கல்பாவின் கரையோரப் பகுதியில் கோர் கல்பா சதுப்புநிலங்களுக்குள் இது அமைந்துள்ளது.
  • கட்டணம்: அனைவருக்கும் இங்கு அனுமதி இலவசம்.

4. வாடி அல் ஹெலோ (Wadi Al Helo):

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள பள்ளத்தாக்குகளில் வாடி அல் ஹெலோ ஆனது, ஹைகிங் ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாகும். இதற்கு அரபு மொழியில் ‘இனிப்பு பள்ளத்தாக்கு’ என்று பொருள். ஏனெனில், இது ஏராளமான நிலத்தடி நீரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மலையேற்றத்தில் அனுபவம் இல்லாதவராக இருந்தால், பணம் செலுத்தி, வழிகாட்டப்பட்ட ஹைகிங் சுற்றுலாக்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்வது சிறந்தது. மேலும், பழைய கோட்டையில் இருந்து, ஹஜர் மலைத்தொடரின் 360 டிகிரி காட்சியை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

  • இடம்: ஷார்ஜா-கல்பா சாலையில் வாடி அல் ஹெலோ இன்டர்சேஞ்ச் அருகில் (E102).
  • கட்டணம்: அனைவருக்கும் அனுமதி இலவசம்.

5. வாசித் நேச்சர் ரிசர்வ் (Wasit Nature Reserve):

கண்களுக்கு இனிமையான பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அழகிய மணல் திட்டுகள் மற்றும் உப்பு அடுக்குகள் முதல் குளங்கள் மற்றும் ஒரு பெரிய ஏரி வரை பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதியளிக்கும் இந்த ரிசர்வ், ஷார்ஜா நகரத்திற்குள் அமைந்துள்ளது.

குறிப்பாக, இங்கு இளஞ்சிவப்பு ஆதரவு பெலிகன், ஃபிளமிங்கோக்கள் மற்றும் பளிங்கு வாத்துகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவை இனங்கள் முகாமிட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இங்கு அமைக்கப்பட்டுள்ள 8 பார்க்கும் தளங்களில் இருந்து கடலோரப் பறவைகளைக் கண்டு ரசிக்கலாம்.

இடம்: அல் ஹோமா பகுதியில் ஷேக் சலீம் பின் சுல்தான் அல் காசிமி ஸ்ட்ரீட் சாலையில் அமைந்துள்ளது.

கட்டணம்: பெரியவர்களுக்கு 15 திர்ஹம் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இங்கு அனுமதி இலவசம்.

ஈத் விடுமுறையில் திறந்திருக்கும் நேரம்: வியாழன் முதல் ஞாயிறு வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழக்கமான நாட்களில் நேரங்கள்: ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். செவ்வாய்க்கிழமை மூடப்படும்.