ADVERTISEMENT

அமீரகத்தில் சிறந்த மருத்துவருக்கான விருதை வென்ற தமிழ் மருத்துவர்.. 10 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு கிடைத்த அங்கீகாரம்..!!

Published: 12 Jun 2023, 12:36 PM |
Updated: 12 Jun 2023, 1:33 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவம், கல்வி, வணிகம், சேவை, விவசாயம், விளையாட்டு, ஆளுமை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கக் கூடிய அமீரக தமிழர்களை கவுரவிக்கும் வகையில், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி குழுமம் சார்பாக, 2023ம் ஆண்டிற்கான ‘எழுமின் விருதுகள்’ வழங்கும் விழா வெகுவிமரிசையாக அமீரகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மே மாதம் 13ஆம் தேதி துபாயில் நடத்தப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் விழாவில், அமீரகத்தில் தங்கள் துறைகளில் பல வருடங்களாக சாதனை புரிந்து வரும் தமிழர்களுக்கு, விழாவில் கலந்துகொண்ட அனைவரின் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி குழுமம் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவபடுத்தியுள்ளனர்.

அதில் மதுரையை பூர்வீகமாக கொண்ட Dr.ஹக்கீம் இப்ராஹிம் முஹம்மது அலி என்பவர் மருத்துவ துறையில் சிறந்த மருத்துவருக்கான விருதை பெற்றுள்ளார். மருத்துவத் துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர் அவசர சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும் உலகின் பல நாடுகளில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட Dr.ஹக்கீம், தற்போது துபாய் கிங்ஸ் கல்லூரி லண்டன் மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
Dr.ஹக்கீம் இப்ராஹிம் முஹம்மது அலியின் புகைப்படம்

மருத்துவ துறையில் விருது வாங்கியது குறித்து Dr.ஹக்கீமை நமது கலீஜ்தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, மருத்துவத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாகவும், அவசர சிகிச்சை மருத்துவம் தொடர்பாக கத்தார், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பா போன்ற பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் தன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை முன்வைத்து இருப்பதாகவும் கூறினார். மேலும் அவசர சிகிச்சை மருத்துவத்தில் அமெரிக்கன் அவசரகால கல்லூரி மற்றும் அவசர மருத்துவத்திற்கான ஐரோப்பிய சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அத்துடன், கடல் கடந்து வந்து தன்னை சிறந்த மருத்துவனாய் அங்கீகரித்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றியை தெரிவித்ததுடன், இந்த விருது இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தன்னை சோர்வின்றி தன் துறையில் பயணிக்க செய்யும் என்றும், தமிழ் மக்களுக்கு அவசர சிகிச்சை குறித்த கேள்விகள் அல்லது சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

கத்தார் அரசினால் சிறந்த மருத்துவர் என அங்கீகரிக்கப்பட்டுள்ள Dr.ஹக்கீம், அட்வான்ஸ்டு கார்டியாக் (cardiac) லைஃப் சப்போர்ட், அட்வான்ஸ்டு பீடியாட்ரிக் (pediatric) லைஃப் சப்போர்ட் மற்றும் அட்வான்ஸ்டு ட்ராமா (trauma) லைஃப் சப்போர்ட் போன்றவற்றில் சான்றிதழ்களை பெற்று அவரச சிகிச்சை மருத்துவத்தில் அமீரகத்தில் தலை சிறந்த தமிழ் மருத்துவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.