ADVERTISEMENT

வெளிநாட்டினருக்கான 3 மாத விசிட் விசாவை மீண்டும் அறிமுகம் செய்த அமீரக அரசு!! – இனி 90 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம்..!!

Published: 14 Jun 2023, 11:40 AM |
Updated: 14 Jun 2023, 12:28 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கான மூன்று மாத விசிட் விசாவை, அமீரக அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அமீரகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மூன்று மாத விசிட் விசா, கடந்த ஆண்டு இறுதியில் அமீரக அரசால் ரத்து செய்யப்பட்டு, நீண்ட காலத்திற்கு நாட்டை சுற்றிப்பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்காக 60 நாள் விசா அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

எனவே, தற்போதைய அறிவிப்பின்படி 90 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் விசிட் விசாவை பெற பயண முகவர்களிடம் ஆலோசனை செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) ஃபெடரல் அத்தாரிட்டியின் கால் சென்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவல் குறித்து துபாயில் ஹோர் அல் அன்ஸ் (Hol Al Anz) பகுதியில் உள்ள டிராவல் ஜோன் இன்டர்நேசனல் டூரிஸம் நிறுவனத்தின் உரிமையாளரான SKV ஷேக் அவர்களிடம் கேட்ட போது, அவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மேலும் அவரது நிறுவனம் மூலமாக இந்த 90 நாட்கள் விசிட் விசா எடுத்து தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 30 நாள் அல்லது 60 நாள் என குறுகிய கால விசாவில் வந்தவர்களும் கூட, கூடுதல் கட்டணத்தில் உள்நாட்டிலேயே மேலும் ஒரு மாத காலத்திற்கு தங்களின் விசாவை நீட்டிக்க முடியும் என கடந்த மே மாத இறுதியில் அமீரக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நுழைவு அனுமதிகள்:

பார்வையாளர்களுக்கு சுற்றுலா விசா அல்லது விசிட் விசா என்ற இரண்டு வகையான நுழைவு அனுமதிகள் உள்ளன. ஒரு சுற்றுலா விசா 30 அல்லது 60 நாட்களுக்கு நாட்டில் தங்க அனுமதிக்கிறது, அதுபோல விசிட் விசா 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறுகிய காலம் தங்க விரும்பும் பார்வையாளர்களிடையே 30 நாள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 நாள் சுற்றுலா விசாக்கள் நீண்ட காலமாக பிரபலமாக உள்ளன. இந்த விசாக்களில் நாட்டின் பிரபலமான அடையாளங்களைப் பார்வையிடவும், உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் டைனிங் அனுபவங்களில் ஈடுபடுவதற்கும் குறுகிய கால விசா சுற்றுலாவாசிகளிடம் பிரபலமானதாக உள்ளது.

90 நாள் விசாவிற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தற்போது, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாத விசிட் விசாவிற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும், இது துபாய் மற்றும் அபுதாபிக்கு மட்டும் செல்லுபடியாகும் என்றும் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நுழைவு அனுமதிக்கு பெரும்பாலும் அமீரகத்தில் வசிக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் செலவிட விரும்பும் பார்வையாளர்களே விண்ணப்பிக்கிறார்கள் என்பது பயண முகவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தேவையான ஆவணங்கள்:

நீண்ட கால விசிட் விசாவிற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

  1. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம்
  2. பாஸ்போர்ட் நகல்

செயலாக்க நேரம்:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விசாவிற்கு விண்ணப்பித்த ஐந்து வேலை நாட்களுக்குப் பிறகு பெறலாம்.

செலவு:

உங்களது டிராவல் ஏஜென்டைப் பொறுத்து, 90 நாள் விசிட் விசாவிற்கான கட்டணம் மாறுபடும். தோராயமாக 1,500 திர்ஹம் முதல் 2,000 திர்ஹம் வரை செலவாகலாம்.