UAE: சமூக ஊடகத்தில் பின்பற்ற வேண்டிய 5 விதிமுறைகள்..!! மீறினால் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம், சிறைதண்டனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா..?? அல்லது அமீரகத்தில் வசித்து வரும் நீங்கள் நாட்டில் சமூக ஊடகச் சட்டங்கள் பற்றியும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கான விதிகளை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்களா?? உங்களுக்கான பதிவுதான் இது.
அமீரகத்தில் சமூக வலைத்தள விதிகளை மீறுவது சட்டவிரோதமாகும். மேலும், சைபர் குற்றங்கள் புரிபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆதலால், நீங்கள் அமீரக சைபர் கிரைம் சட்டத்தின் விதிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது முக்கியமானதாகும்.
பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகமானது சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின்படி, வலைதளங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அடிப்படை சமூக ஊடக விதிகள்:
>> சமூக ஊடகங்களில் எந்த மதத்தையும் இழிவுபடுத்தியோ அல்லது அவமதிப்பு அல்லது புண்படுத்தும் வகையிலோ பதிவுகளை பதிவிடக் கூடாது. மேலும், இதுபோன்ற குற்றங்களுக்கு அமீரக சைபர் கிரைம் சட்டத்தின் பிரிவு 37 இன் படி, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 250,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
>> கடத்தல், வன்முறை, ஆபாசம், விபச்சாரம் போன்ற பொது ஒழுக்கத்திற்கு எதிரான செயல்கள் மற்றும் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்தவொரு பதிவையும் இடுகையிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சைபர் கிரைம் சட்டத்தின் பிரிவு 32 முதல் பிரிவு 34 வரை, இத்தகைய குற்றங்களுக்கு ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 250,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
>> அரசாங்கம், ஆளும் கட்சி சின்னங்கள், அமீரகத்தின் அரசியலமைப்பு மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக எந்தவொரு உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்வதோ பதிவிடுவதோ கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
>> அதுபோல, தனிநபர் ஒருவரின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் புகைப்படம், வீடியோக்கள் அல்லது கருத்துகளை பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய குற்றங்களுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 150,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
>> நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு எதிராக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம், தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும். மேலும், அரசு அல்லது குற்றவியல் விசாரணைகள் தொடர்பான ரகசிய விஷயங்களையோ, நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் பொது ஒழுக்கங்களை மீறும் விளம்பரங்களையோ வெளியிடக் கூடாது.
குறிப்பாக, நீங்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மூலம் கட்டணங்களுக்கு உட்பட்ட விளம்பரங்களை ஏற்க விரும்பினால், நீங்கள் தேசிய மீடியா கவுன்சில் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வேறு ஏதேனும் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து உரிமத்தைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.