ADVERTISEMENT

துபாயில் திறக்கப்பட்ட புதிய பாலம்: போக்குவரத்து நெரிசல் குறையும்; காத்திருப்பு நேரம் 85% வரை மிச்சமாகும்!

Published: 9 Aug 2026, 4:15 PM |
Updated: 9 Aug 2026, 4:15 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அல் குத்ரா சாலை மற்றும் ஷேக் சயத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷனில் நான்கு வழிப்பாதைகள் கொண்ட புதிய பாலத்தைத் திறந்துள்ளது. இந்த நடவடிக்கை, பரபரப்பான இந்தச் சந்திப்பில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை 85 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் புதிய பாலம் அல் குத்ரா சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சராசரி காத்திருக்கும் நேரத்தை கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களிலிருந்து வெறும் ஒரு நிமிடமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மேம்பாட்டுப் பணிகள் சந்திப்பின் வாகனக் கையாளும் திறனை மணிக்கு 7,800 வாகனங்களிலிருந்து 19,400 வாகனங்களாக அதிகரிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இண்டர்செக்ஷனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள 700 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், அல் குத்ரா சாலை வழியாக அல் குத்ரா நகரத்தை நோக்கிச் செல்லும் போக்குவரத்தைக் கையாள்கிறது.

ADVERTISEMENT

இதன் திறப்புடன், இந்த இன்டர்செக்ஷனிற்கான முக்கிய போக்குவரத்து கட்டமைப்புப் பணிகள் நிறைவடைவதாகவும் RTA கூறியுள்ளது. அல் குத்ரா நகரத்திலிருந்து உம் சுகீம் (Umm Suqeim) நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான எதிர் திசைப் பாலம் ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. அப்போது, ​​முக்கியப் பாதைகளில் உள்ள போக்குவரத்தைப் பாதிக்காமல் வாகனங்கள் வெவ்வேறு திசைகளில் செல்ல உதவும் வகையில் இரண்டு பக்கவாட்டுச் சரிவுப் பாலங்களை திறக்கவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள தகவலின் படி, 500 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலம், அல் குத்ரா சாலையிலிருந்து ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் வழியாக ஜெபல் அலி (Jebel Ali) நோக்கிச் செல்லும் போக்குவரத்தைக் கையாளும்.

900 மீட்டர் நீளமுள்ள மற்றொரு பாலம், டவுன்டவுன் துபாய் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குப் பயன்படும்.

மேலும், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில், ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டின் இருபுறமும் 3 கி.மீ நீளமுள்ள சர்வீஸ் சாலைகளை (service roads) அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்.

இது குறித்து RTA-வின் தலைமை இயக்குநரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மத்தார் அல் தயர் (Mattar Al Tayer) கூறுகையில், மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஏற்ப துபாயின் சாலை உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்தத் திட்டத்தில் பல சந்திப்புகளை மேம்படுத்துதல், சுமார் 4 கி.மீ நீளத்திற்குப் பாலங்கள் அமைத்தல் மற்றும் 11.6 கி.மீ நீளமுள்ள அல் குத்ரா சாலையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும். இந்த மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்ததும், இந்த வழித்தடத்தில் பயண நேரம் 9.4 நிமிடங்களிலிருந்து வெறும் 2.8 நிமிடங்களாக, அதாவது 70 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, 4 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளுக்கும், மேம்பாட்டுப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று RTA கூறியுள்ளது.

பயனடையவிருக்கும் பகுதிகள்

அல் குத்ரா சாலை என்பது துபாய் முழுவதும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளையும் முக்கிய சாலைகளையும் இணைக்கும் ஒரு முக்கிய கிழக்கு-மேற்கு வழித்தடமாகும்.

இந்தத் திட்டம் ஷேக் முகமது பின் சையத் சாலையுடனான இன்டர்செக்சனிலிருந்து எமிரேட்ஸ் சாலை வரை நீண்டுள்ளது. மேலும் இது பின்வரும் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:

  • அரேபியன் ராஞ்சஸ் 1 மற்றும் 2
  • துபாய் மோட்டார் சிட்டி
  • துபாய் ஸ்டுடியோ சிட்டி
  • அகோயா
  • முடன் (Mudon)
  • டமாக் ஹில்ஸ்
  • தி சஸ்டைனபிள் சிட்டி

இந்த மேம்பாடுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எமிரேட்ஸ் சாலைக்கும் அல் குத்ரா சிட்டிக்கும் இடையிலான போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும் என்று ஆணையம் கூறியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அல் குத்ரா சாலை மற்றும் அரேபியன் ராஞ்சஸை துபாய் ஸ்டுடியோ சிட்டியுடன் இணைக்கும் சாலையின் சந்திப்பில், 1.2 கி.மீ நீளமுள்ள நான்கு வழிப் பாலத்தை RTA திறந்து வைத்தது.

அதன் பின்னர், மே மாதத்தில், எமிரேட்ஸ் சாலை–அல் குத்ரா சாலை சந்திப்பில் மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தன. இதில், ஜெபல் அலி நோக்கிய ஒரு புதிய சேவைச் சாலையும், துபாய் நகர மையத்திலிருந்து அல் குத்ரா சிட்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான தடையற்ற சுற்றுவழி வளைவும் அடங்கும்.

அதேபோல், ஜெபல் அலியிலிருந்து எமிரேட்ஸ் சாலை வழியாக அல் குத்ரா சாலை வழியே உம் சுக்கீம் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்காக, மற்றொரு தடையற்ற சுற்றுவழி வளைவு இந்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, RTA 4.8 கி.மீ நீளமுள்ள எமிரேட்ஸ் சாலையின் ஒருங்கிணைந்த பகுதியில் கூடுதல் வழித்தடங்களையும் சேர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel